Last Updated : 31 Dec, 2024 04:01 AM

5  

Published : 31 Dec 2024 04:01 AM
Last Updated : 31 Dec 2024 04:01 AM

கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பம்சங்கள்!

கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், அவற்றை இணைக்கும் புதிய பாலம் ஆகியவை மின்னொளியில் ஜொலிக்கின்றன.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சமாக, திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில், ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தா’ படகில், கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்றார். அவரை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் வழியே விவேகானந்தர் பாறை வரை நடந்து சென்ற முதல்வர், மீண்டும் பாலம் வழியாக திருவள்ளுவர் பாறைக்கு திரும்பினார். அமைச்சர்கள், பிரமுகர்களும் உடன் சென்றனர். பின்னர், திருவள்ளுவரின் பாதத்தில் முதல்வர் மலர் தூவி வணங்கினார். அங்கிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் கடலின் இயற்கை அழகை ரசித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

சிலையின் பீடம் அருகே நடந்த நிகழ்ச்சியில், திருக்குறள் அறநெறியை பரப்பி வரும் 25 தமிழ் ஆர்வலர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார். மாலை 6 மணி அளவில் கரை திரும்பிய முதல்வர், பூம்புகார் போக்குவரத்து கழக வளாகத்தில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்டார். படகு இல்ல வளாகத்தில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளிக்காட்சியை திறந்து வைத்தார். இரவு 7 மணி அளவில், கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகை அருகே சுகிசிவம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தார்.

துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ராசா,தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய முதல்வர், இன்று நடைபெறும் 2-வது நாள் விழாவில் பங்கேற்கிறார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீடு, ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற நூலின் புதிய பதிப்பு வெளியீடு, திருவள்ளுவர் பசுமை பூங்கா, திருக்குறள் கண்காட்சி திறப்பு விழா, திருவள்ளுவர் அலங்கார தோரண வாயில் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x