Published : 31 Dec 2024 03:23 AM
Last Updated : 31 Dec 2024 03:23 AM
சென்னை: இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கான முன்தயாரிப்பு பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரு விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கான பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டின் 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.
திட்டமிட்டபடி ராக்கெட் நேற்று இரவு 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடத்தில் தரையில் இருந்து 476 கி.மீ உயரத்தில் விண்கலங்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். தற்போது ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவரும் விண்கலங்களை அடுத்த 2 வாரங்களில் ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொன்றுக்கு அவர்கள் மாறவும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படும். இந்த திட்டம் வெற்றி பெற்றால் வல்லரசு நாடுகளை போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும். அதனுடன் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்கள் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக அமையும். மேலும், இந்த சாதனையை அடையும் 4-வது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் எனும் பரிசோதனை முயற்சியும் 4-வது முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, பிஎஸ்-4 இயந்திரத்தை இருமுறை நிறுத்தி மீண்டும் இயக்கி, அதன் உயரமானது 365 கி.மீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டது. இதில் 24 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு போடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT