Published : 31 Dec 2024 01:24 AM
Last Updated : 31 Dec 2024 01:24 AM

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை விவகாரம்: தேசிய மகளிர் ஆணைய விசாரணை தொடங்கியது

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் டிஜிபி பிரவீன் தீட்ஷித் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானத்தில் கடந்த 29-ம் தேதி இரவு சென்னைக்கு வந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் சென்ற அவர்கள், அங்கு விசாரணையை தொடங்கினர். வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகிகள், ஊழியர்கள், காவலாளிகள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, சம்பவத்தன்று உடன் இருந்த மாணவர், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் விவரமாக கேட்டு குறிப்பெடுத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் எங்கெங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன, 139-ல் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, வழக்கில் சிக்கிய இளைஞர் எந்த கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டார் என்பது உள்ளிட்ட தகவல்களையும் சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸாரிடமும் விசாரணை மேற்கொண்டு, தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) 14 பேர் பார்த்ததாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் மூலமாக வெளியே கசிந்ததா என்றும் விசாரித்தனர். அவர்களை பற்றிய முழு விவரங்களை திரட்டி தருமாறு சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேட்டுள்ளனர்.

இந்த விசாரணை மாலை 5 மணி வரை நடைபெற்றது. பின்னர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிறகு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை சந்தித்தனர்.

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, பெண் வழக்கறிஞர்கள் குழு, பெண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம், ஏபிவிபி மாணவர் சங்கத்தினர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் மனு கொடுத்தனர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x