Published : 31 Dec 2024 01:14 AM
Last Updated : 31 Dec 2024 01:14 AM
தமிழக மக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்காததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, ரூ.1,000 சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல், அதிக கனமழை போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகி மக்கள் மனஉளைச்சலில் இருந்து வரும் நிலையில், திமுக அரசின் பொங்கல் தொகுப்பில் பணம் இல்லாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கம், பொங்கல் தொகுப்புடன் வழங்க அரசு முன்வரவேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. தேர்தல் வந்தால் பணம் கொடுக்கும் அரசு, அந்த ஆண்டில் தேர்தல் இல்லை என்றால் பணம் வழங்குவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நிதி நெருக்கடி காரணங்களை கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக் கூடாது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ஏற்கெனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய்ச் சேராத நிலையில், குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுடன் வழக்கமாக வழங்கப்படும் ரூ..1,000 ரொக்கத்தையாவது தாமதமின்றி மக்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாவிட்டால் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஏமாற்றமடைவார்கள். இதை கருத்தில் கொண்டு பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகையையும் சேர்த்து அரசு வழங்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வரும் நிலையில் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டுவது பொருத்தமல்ல. எனவே பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 1,000 வழங்க அரசு முன்வர வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ரொக்கப் பணம் இல்லாத தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. பொங்கல் பண்டிகையையொட்டி ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT