Published : 30 Dec 2024 07:02 PM
Last Updated : 30 Dec 2024 07:02 PM
சென்னை: “ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக தவெகவினரை கைது செய்தது கண்டனத்துக்குரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சியினரைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா? இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களை தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் தவெக மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்களை வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா? இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்று விஜய் கூறியுள்ளார்.
நடந்தது என்ன? - அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் கொண்ட மனுவை விஜய், தமிழக ஆளுநரிடம் வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே.
அதற்காகவே இக்கடிதம்... எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டு தவெக தலைவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
விஜய் எழுதிய கடிதத்தை தவெக கட்சியினர் சென்னை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகித்தனர். அப்போது காவல் துறையினருக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை தி.நகரில் கடிதம் வழங்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் தவெகவினர் பலரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT