Published : 30 Dec 2024 03:27 PM
Last Updated : 30 Dec 2024 03:27 PM

“சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல்” - பழனிசாமி மீது அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்

கீதா ஜீவன் | எடப்பாடி பழனிசாமி

சென்னை: “தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழக மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கே எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கும் பழனிசாமி, படிக்கவரும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல். உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு உரிய பதில் அளித்துவிட்டபோதும் தனது சுய அரசியல் ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும் மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னிருந்த அதிமுக பிரமுகர்களை காப்பாற்றவும், அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருளானந்தத்தை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட பெண்களையே அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை தமிழக மக்கள் என்றும் மறக்கவே மாட்டார்கள். அதுமட்டுமா, உதவி கேட்டு வந்த பெண்ணை “மெயின் ரோட்டிற்கு வா” என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும் அதிமுக ஆட்சியில்தானே அரங்கேறியது. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்திவிட்டு தற்போது பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் போல நடிப்பது அபத்தம்.

புதுமைப் பெண் திட்டம் , பெண்கள் விடியல் பயணம் , மகளிர் உரிமைத் தொகை என பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீதும் தமிழக முதல்வர் மீதும் என்ன அவதூறு பரப்பினாலும் அதை தமிழக பெண்கள் துளியும் நம்பபோவதில்லை. எடப்பாடி ஆட்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே வந்து சொல்லவே பயப்பட்ட நிலை இருந்தது. புகார் பெறவே மாட்டார்கள், ஒருவேளை புகாரை பெற்றுக்கொண்டாலும் எப்ஐஆர் பதிவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிலை மாறி தற்போது திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களுக்கு நேரந்த கொடுமையை சொல்கிறார்கள் என்றால் அது முதல்வர் மீது தமிழக பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இந்த திராவிட மாடல் அரசு என்றும் காக்கும். மாணவியின் புகாரை பெற்ற உடனே எவ்வளவு விரைவாக செயல் பட்டு விசாரணை நடத்தி குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.

நீங்கள் என்னதான் அச்சுறுத்தி பெண்களை வெளியே வராதே, படிக்க வராதே என மறைமுகமாக தடுக்க முயன்றாலும் தமிழக பெண்கள் தைரியமாக வெளியே வந்து வாழ்வின் உயர்நிலைக்கு செல்வார்கள் அதற்கு இந்த திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழிதோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழக மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே அமைச்சர் கீதா ஜீவன் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. | வாசிக்க > அதிமுக ஒட்டிய ‘யார் அந்த சார்?’ போஸ்டரால் பரபரப்பு

உயர் கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் எதிர்வினை: “முதல்வராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் ‘சார் யார்?’ என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்” என்று உயர் கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x