Published : 30 Dec 2024 03:04 PM
Last Updated : 30 Dec 2024 03:04 PM
‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு’ ஐ.நா. விருது வழங்கியதை தமிழ்நாடு அரசு பெருமையோடு சொல்லிக் கொள்கிறது. அண்மையில், ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் இந்தத் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளின் வீட்டுக்கே சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கி, நலம் விசாரித்தார் முதல்வர். அரசு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினைகள்.
2021 ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கியது தமிழக அரசு. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிசிஸ் என தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவை அளிப்பது தான் இத்திட்டத்தின் சிறப்பு. இதற்காக சுமார் 13 ஆயிரம் பெண் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். தினமும் 2 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லி இவர்களை பணிக்கு எடுத்தவர்கள், இப்போது சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கிராம சுகாதார செவிலியர் பணி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளைக் கவனிக்கும் பணி, கர்ப்பிணிகள் விவரம் சேகரிப்பு, தனி மனிதரின் மருத்துவ சிகிச்சை முறை சேகரிப்பு, அலைபேசியில் பதிவேற்றம் என பணிகள் சுமத்தப்படும் இவர்களுக்கு தினக்கூலி ரூ.183 மட்டுமே.
“இதை வைத்துக் கொண்டு எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பும் இந்தப் பணியாளர்கள், “இஎஸ்ஐ, பிஎஃப் திட்டம், திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ச்சியாக அரசுக்கு வைத்து வருகிறோம். மாதந்தோறும் ஊழியர்களின் உழைப்பை மதிப்பிடும் ஸ்கோர் கார்டு முறையை கைவிடுவது, அனைவருக்கும் பேறுகால ஊதியத்துடன் விடுப்பு, ஆண்டுக்கு 2 சீருடை, பணியாற்றும் இடங்களில் விசாகா குழுக்களை அமைப்பது, போக்குவரத்துபடி மற்றும் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளும் எங்களுக்கு உண்டு.
முதலில், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் வேலை என்று சொல்லிவிட்டு, தற்போது தொற்றுநோய் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செய்ய வைக்கிறார்கள். எவ்வித பயிற்சியும் தராமல், காசநோய் அறிகுறிகள் இருக்கும் நபர்களின் வீட்டுக்கே சென்று சளி மாதிரி எடுத்து, தினமும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொடுக்கச் சொல்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சரண்யா என்ற ஊழியர் கடந்த ஆண்டு தனது குழந்தையுடன் பணிக்குச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதுவரை அரசு, அந்தக் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவில்லை. மதுரை மேலூர் சேக்கிப்பட்டியில் தனலட்சுமி என்ற பட்டியலினத்து பணியாளர் மீது சாதிரீதியிலான தாக்குதல் நடந்தது. அதற்கும் நியாயம் கிடைக்கவில்லை. இப்படியான பணிப் பாதுகாப்பற்ற சூழலும் எங்களுக்கு உள்ளது.
இத்தனையும் தாங்கிக் கொண்டு சொற்ப வருமானத்தில் வேலை செய்யும் எங்களுக்கு ஐ.நா-வின் பாராட்டு மட்டுமே சோறு போடாது. எனவே, எங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர். மக்களைத் தேடிப் போய் மருத்துவ சேவை செய்யும் இந்தப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு செவிசாய்க்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...