Published : 30 Dec 2024 01:46 PM
Last Updated : 30 Dec 2024 01:46 PM
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் இன்று (டிச.30) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை விஜய் தமிழக ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
ஆளுநருடனான சந்திப்பின் போது விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர். ஆளுநரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை விஜய் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: “இன்று (டிச.30) தவெக தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும், என தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாக கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தின. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். மேலும், விஜய் இன்று (டிச.30) தன் கைப்பட எழுதிய கடிதத்தில், “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து ஆளுநருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில், இன்று காலை விஜய் எழுதிய கடிதத்தின் பிரதிகள் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தவெக மகளிரணி நிர்வாகிகள் இந்தப் பிரதிகளை பெண்களுக்கு வழங்கி வருகின்றனர். | விரிவாக வாசிக்க > “பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT