Published : 30 Dec 2024 06:07 AM
Last Updated : 30 Dec 2024 06:07 AM
சென்னை: தமிழகத்தில் பிறவிலேயே காது கேளாத குழந்தைகளை கண்டறிந்து இலவசமாக காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிறவிலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில், ‘காக்ளியர் இன்ப்ளான்ட்’ கருவி பொருத்தப்படுகிறது. பிறவிலேயே காது கேளாமை பாதிப்பால் 1,000-க்கு 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இவை பிறக்கும்போதே கண்டறியப்படவில்லை என்றால், நிரந்தரமாக பாதிக்கப்படுவதுடன், ஒலி உலகத்தை அனுபவிக்கும் திறனும் இல்லாமல் போய்விடும்.
இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி, புதிதாக பிறந்த 3.1 லட்சம் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 406 குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 205 பேருக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் காக்ளியர் இன்ப்ளான்ட் கருவி அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 170 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் 31 குழந்தைகளுக்கு அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.6.5 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT