Published : 30 Dec 2024 06:20 AM
Last Updated : 30 Dec 2024 06:20 AM

பேருந்​துகளில் காவல்​துறை​யினருக்கு கட்ட​ணமில்லா பயணம்: ஓட்டுநர், நடத்​துநர்​களுக்கு வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் தொடர்பாக கடந்த மே மாதம் நடத்துநருடன் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி வைரலானது.

இதையடுத்து, முதல்வரின் அறிவிப்புபடி காவலர்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையொட்டி, காவலர்களின் கட்டணமில்லா பயணம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

இந்த பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம். பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, வாரண்ட் பெற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புற்றுநோயாளிகளுக்கு: இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோயாளிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வர மூன்று மாதத்துக்கு பயணச் சலுகை சான்றிதழ் வழங்கப்பட்டது. அது தற்போது ஓராண்டுக்கு செல்லத் தக்க வகையில் புத்தக வடிவில் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், புற்றுநோயாளிகளுக்கான பயணச் சலுகையை ஓராண்டுக்கு வழங்க வேண்டும் எனவும் மற்றொரு உத்தரவில் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x