Published : 30 Dec 2024 06:12 AM
Last Updated : 30 Dec 2024 06:12 AM

வி​திகளை மீறி செயல்​படு​வதாக புகார்: மாநக​ராட்சி கவுன்சிலர்கள் 4 பேருக்கு நோட்​டீஸ்

சென்னை: சென்னை மாநகாரட்சியில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், விதிகளை மீறி செயல்படுவதாக கூறி மேலும் 4 கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் இறந்துவிட்ட நிலையில், தற்போது 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளை மேற்பார்வையிடுவதில்லை. மக்கள் புகார்களை அலட்சியப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், கவுன்சிலர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக விரிவாக்கப்பட்ட மண்டலங்களான திருவொற்றியூர், மாதவரம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, ஆலந்தூர், மாதவரம் ஆகியவற்றில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கூறிய பணிகளுக்கு கவுன்சிலர்கள் பணம் கேட்பதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிடம் அறிக்கை கேட்டிருந்தார். அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில், பெரிய அளவில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்பு, 29-வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திகேயன், 189-வது வார்டு திமுக கவுன்சிலர் வி.பாபு, 193-வது வார்டு அதிமுக கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி, 195-வது வார்டு திமுக கவுன்சிலர் கே.ஏகாம்பரம் ஆகிய 4 கவுன்சிலர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் பதவியை பறிக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் அண்மையில், 5-வது வார்டு திமுக கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், 144-வது வார்டு திமுக கவுன்சிலர் இ.ஸ்டாலின், 173-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சுபாஷினி, 182-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் ஆகிய 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x