Published : 30 Dec 2024 06:04 AM
Last Updated : 30 Dec 2024 06:04 AM
சென்னை: ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே விழா நடைபெறும். போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வரும், அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநரும் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள்.
இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவார். அப்போது தேசிய கீதம் இசைக்க, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்படும். பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார்.
விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முப்படைகளின் கவச வாகனங்கள், அரசுத் துறைகளின் திட்ட விளக்க வாகனங்கள் அணிவகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து, சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகளை முதல்வர் வழங்குவார்.
இந்த நிலையில், குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. கண்காணிப்பு கோபுரம், பொதுமக்கள் அனுமதிக்கப்படும் பகுதிகளுக்கான தடுப்புகள், மரக்கட்டைகளாலான தற்காலிக மேடைகள், தற்காலிக கழிப்பறைகள், முக்கிய பிரமுகர்களுக்கான நாற்காலிகள், வண்ண விரிப்புகள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.
இதற்கு சுமார் ரூ.43 லட்சத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளியை சென்னை மண்டல பொதுப்பணி துறை செயற்பொறியாளர் கோரியுள்ளார். இந்த ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டதும் குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கும் என பொதுப்பணி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT