Published : 30 Dec 2024 01:16 AM
Last Updated : 30 Dec 2024 01:16 AM
சென்னை: விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக இன்று (டிச.30) இரவு விண்ணில் செலுத்தப்படுகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று இரவு தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.
இந்த விண்கலன்கள் புவியில் இருந்து 476 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. சில மாதங்களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர ராக்கெட் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT