Published : 29 Dec 2024 06:07 PM
Last Updated : 29 Dec 2024 06:07 PM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை குளறுபடிகளால் சுற்றுலாபயணிகள் வருகை 30% குறைந்துள்ளது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டினார்.
அதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குரவத்து பிரிவு மண்டல நிர்வாகிகள் பதவிகளுக்கு தேர்வு செய்ய விருப்பு மனுக்கள் பெறும் கூட்டம் உதகையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குரவத்து பிரிவு மண்டல நிர்வாகிகள் பதவிகளுக்கு தேர்வு செய்ய விருப்பு மனுக்கள் பெறப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், தேயிலை பூங்கா, அரசு மருத்துவக்கல்லூரி, கூட்டுகுடிநீர் திட்டங்கள், சாலைகள் மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை.
தேயிலை பிரச்சினையால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இண்ட்கோ தொழிற்சாலைகளில் அங்கத்தினர்களுக்கு நிர்ணயக்கப்பட்ட விலையை விட குறைந்த விலை வழங்குகின்றனர். தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் விலையை அளிக்க வேண்டும். ஜெயலலிதா ரூ.2 மானியம் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி 30 ஆயிரம் கூட்டுறவு விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.2 கூடுதல் விலை வழங்கினார்.
திமுக அரசு நீலகிரி மாவட்டத்தை கண்டுக்கொள்வதில்லை. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரச்சினை இபாஸ். மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இபாஸ் நடைமுறை குளறுபடிகளால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாபயணிகள் வருகை 30 சதவீதம் குறைந்துள்ளது. பிரச்சினை தொடர்ந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் எந்த திட்டமிடலும் இல்லை. மாவட்டத்தின் வளர்ச்சி குறைகிறது.
மாவட்ட நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.கூடலூர் பகுதியில் யானைகள், பிரிவு 17 நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பிரச்சினைகள் உள்ளன. அதிமுக எம்எல்ஏ ஜெயசீலன் இதுகுறித்து சட்டப்பரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். யானைகள் நுழைவதை தடுக்க அகழி வெட்ட வேண்டும், மின் வேலி அமைக்க வேண்டும். அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மகந்திரன், மாவட்ட துணை செயலாளர் வி.காபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT