Published : 29 Dec 2024 01:33 PM
Last Updated : 29 Dec 2024 01:33 PM
புதுச்சேரி: தமிழகத்தை போல் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு இம்முறை ரேஷனில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஆனால் அதற்கான முன் ஆயத்த பணிகளோ, டெண்டர் நடவடிக்கையோ ஏதும் தொடங்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டது. அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்ததது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து தீபாவளி, பொங்கல் பொருட்களுக்கு பதிலாக நேரடியாக வங்கிக் கணக்கில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான தொகை செலுத்தப்பட்டது. 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 2022 பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கடந்த 2022-ல் வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு பணம் ரூ.500 வழங்கியது. அதன்பிறகு கூடுதலாக ரூ.250-ம் தரப்பட்டது. மொத்தமாக ரூ.750 கடந்தாண்டு தரப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை புதுச்சேரி அரசு திறந்தது.ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளிக்கு தரப்பட்டது. அதைத் தொடர்ந்து மாத இலவச அரிசியும் 15 நாட்களுக்குள் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ளது.
தமிழகத்தில் அரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் வரும் 9-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதனால் பொங்கல் தொகுப்பு பொருட்களும் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.ஆனால் அரசு வட்டாரங்களில் விசாரித்தால், பொங்கல் தொகுப்பு தர முன் ஆயத்தப் பணிகள் ஏதும் நடக்கவில்லை. டெண்டர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொருட்கள் தருவது கடினம். பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவார்களா என்பதை அரசுதான் அறிவிக்கவேண்டும் என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT