Published : 29 Dec 2024 01:40 PM
Last Updated : 29 Dec 2024 01:40 PM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் ஐ.அருள் அறம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி ஒரு மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தால் பல்கலைக் கழகத்தின் புகழ், பெருமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் புகார் கொடுத்த மாணவியின் தைரியத்தை பாராட்டுகிறோம்.
பல்கலைக்கழக வளாகத்தில் வளர்ந்து கிடக்கும் தேவையற்ற செடிகளை அவ்வப்போது அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். சூரிய சக்தி மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து மின் விளக்குகளும் இரவு நேரத்தில் எரிவதை உறுதி செய்ய வேண்டும். வளாகம் முழுவதையும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
வெவ்வேறு நுழைவுவாயில்கள் இல்லாமல், ஒரு நுழைவுவாயில் வழியாக மட்டுமே பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் காவல் ஊழியர்கள் ரோந்து செல்ல வேண்டும். வெளி நபர்களின் வாகனங்கள், கட்டணம் செலுத்தி வாக்கிங் செல்வது ஆகியவற்றை அனுமதிக்க கூடாது.
பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படாததும், மூத்த பேராசிரியர் ஒருவர் பொறுப்பு துணை வேந்தராக கூட நியமிக்கப்படாததும் பல்கலைக் கழகத்தின் அன்றாட செயல்பாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. வளாகத்தில் முறையான பாதுகாவல் ஏற்பாடுகள் இல்லாததால் பாதுகாப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT