Published : 29 Dec 2024 11:16 AM
Last Updated : 29 Dec 2024 11:16 AM
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி தமிழக தலைவர்கள் சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், சென்னை அண்ணா சாலை வெலிங்டன் பிளாசாவில் தொடங்கி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, “சென்னையின் வளர்ச்சிக்கு, மன்மோகன் சிங் தமிழகத்துக்கு தந்த திட்டங்கள்தான் காரணம். இதை யாரும் மறக்கக்கூடாது. கிண்டி கத்திப்பாரா பாலம், மெட்ரோ ரயில் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மன்மோகன் சிங் காலத்தில் வந்தவையாகும். அவர் தலைசிறந்த பொருளாதார மேதை. ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியல்வாதி.
பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு திட்டம் பற்றி அவர் பேசும்போது ‘மிகப்பெரிய பொருளாதார பேரழிவு’ என்று ஆவேசமாகச் சொன்னார். பல்வேறு புகழ், பெருமைக்குரியவராக திகழ்ந்தார். அவரை எல்லா அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை உரையாற்றும்போது, “இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதி அமைச்சர், உலக வங்கி இயக்குநர் என எந்தப் பதவியையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருடைய திறமை, உண்மை, நேர்மைக்கு பதவிகள் அவரை வந்து சேர்ந்தன. அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு பேரிழப்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். அவரது புகழ் என்றும் நிலைக்கும்" என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ. அப்துல் சமது உள்ளிட்டோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தை முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தொகுத்து வழங்கினார். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், காங்கிரஸ் எம்எல்ஏ., எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT