Last Updated : 29 Dec, 2024 04:24 AM

4  

Published : 29 Dec 2024 04:24 AM
Last Updated : 29 Dec 2024 04:24 AM

ராமதாஸ் vs அன்புமணி: குடும்ப வாரிசு அரசியலின் விபரீத முகம் 

பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளை​யுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்​படைத்து வருகிறது. அவ்வப்​போது நடக்​கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்​தை​யும் காட்டி வருகிறது. அந்த வரிசை​யில் பாமக​வில் அப்பா, மகன் இடையே நிலவி வந்த பனிப்​போர், தற்போது அக்கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்கள் முன்னிலை​யிலேயே பெரிய அளவில் வெடித்​திருக்​கிறது.

அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற அப்பா ராமதாஸுக்​கும், அதை ஏற்க மறுத்த மகன் அன்புமணிக்​கும் சிறப்பு பொதுக்​குழு மேடை​யிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டு​விட்​டது. குடும்பத்​தில் வேறொருவரை நிர்​வாகியாக நியமிக்​கும் அறிவிப்பை ஆணித்​தரமாக வெளி​யிட்​டதோடு, அன்புமணியை மேடை​யில் நேரடி​யாகவே எச்சரித்​தார் ராமதாஸ்.

வன்னியர் சமூக மக்களின் உரிமை​களுக்​காக​வும், அவர்​களின் முன்னேற்​றத்​துக்​காக​வும் வன்னியர் சங்கத்தை தீவிரமாக செயல்​படுத்தி வந்த ராமதாஸ், அதிகாரத்​துக்கு வந்தால் தான் எல்லாம் செய்ய முடி​யும் என உணர்ந்து, அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்​தார். அதன்​படி, சென்னை​யில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாட்​டாளி மக்கள் கட்சி (பாமக) என்கிற அரசியல் கட்சியை ராமதாஸ் தொடங்​கினார். கட்சி தொடங்கிய போதே, எனது குடும்பத்​தில் இருந்து யாரும் கட்சிக்கு வரமாட்​டார்​கள். ஒருவேளை அப்படி நடந்​தால் என்னை சவுக்​கால் அடியுங்கள் என்றார் ராமதாஸ்.

வடமாவட்​டங்​களில் கணிசமான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்ட பாமக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளு​மன்​றம், சட்டப்​பேரவை தேர்​தல்​களில் வெற்றிகளை பெற தொடங்​கியது. இதனால், கட்சி​யும் படிப்​படியாக வளர்ச்சி அடைந்​தது. தமிழகத்​தில் திமுக, அதிமுக​வுக்கு அடுத்து மூன்​றாவது பெரிய கட்சியாக பாமக உருவெடுத்​தது. கட்சி​யின் வளர்ச்​சி​யில் வன்னியர் சங்கத்​தி​லும், கட்சி​யிலும் பணியாற்றி வந்த காடு​வெட்டி ஜெ.குரு​வின் பங்களிப்பு முக்​கிய​மானதாக இருந்​தது.

எனது குடும்பத்​தில் இருந்து கட்சிக்​குள் யாரும் வரமாட்​டார்கள் என்று தெரி​வித்​திருந்த ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சிக்​குள் கொண்டு வந்து பொறுப்பு வழங்​கியதும், போட்​டியிட செய்​ததும், மத்திய அமைச்​சராக்​கியதும் விமர்​சனத்​துக்​குள்​ளானது.

வயது முதிர்வு காரணமாக கட்சி​யில் ராமதாஸின் செயல்​பாடு குறைய தொடங்​கிய​தால், இரண்​டாம் இடத்​தில் இருந்த அன்புமணி முதலிடத்​துக்கு வந்தார். கூட்டணி பேச்சு​வார்த்​தை​யிலும் அன்புமணி கையே மேலோங்​கியது.

கட்சி​யின் இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணிக்கு கட்சி தலைவர் பொறுப்பு வழங்​கப்​பட்​டது. கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவராக நியமிக்​கப்​பட்​டார். கட்சி தலைவ​ரானதும் கட்சி முழு​வதை​யும் தனது கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வந்தார் அன்புமணி.

ராமதாஸிடம் கலந்​தாலோ​சிக்​காமல் சிலமுடிவுகளை அன்புமணி எடுக்க தொடங்​கினார். இதனால், இருவருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்பட தொடங்​கியது. கட்சி தனது கட்டுப்​பாட்டை விட்டு செல்வதை தெரிந்து கொண்ட ராமதாஸ், மீண்​டும் கட்சியை தனது கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வர நினைத்​தார்.
அதன்​படி, முதல் நடவடிக்கையாக அன்புமணி வகித்த இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ஜி.கே.மணி​யின் மகன் ஜி.கே.எம்​.தமிழ்க்​குமரனுக்கு வழங்​கினார்.

திரைப்பட தயாரிப்பு நிறு​வனத்​தின் தலைமை அதிகாரியாக இருக்​கும் அவர், கட்சி​யில் எந்த விதத்​தி​லும் ஆக்டிவாக இருந்​த​தில்லை. அவருக்கு எப்படி கட்சி​யின் அதிமுக்​கி​யத்துவம் வாய்ந்த, அதுவும் தான் வகித்த பொறுப்பை வழங்​கலாம் என்று ராமதாஸிடம் அன்புமணி கேள்விகளை எழுப்பியாதாக தெரி​கிறது. இந்த விவகாரத்​தில் இருவருக்​கும் இடையே கடும் வாக்கு​வாதம் நடந்​தது. அதேநேரம் ஜி.கே.மணி​யின் மகனுக்கு கட்சி​யில் பொறுப்பு வழங்​கியதற்கு கட்சி​யினரிட​மும் எதிர்ப்பு வலுக்க தொடங்​கியது. இதையடுத்து, இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்​தார் ஜி.கே.எம்​. தமிழ்க்​குமரன். இந்த சம்பவம் ராமதாஸின் கோபத்தை மேலும் அதிகரித்​தது. கட்சி​யில் மகனுக்கு பொறுப்பு வழங்​கியதை அன்புமணியே எதிர்ப்பதை நினைத்து ஜி.கே.மணி​யும் வருத்​தமடைந்​தார்.

எப்படி​யாவது கட்சியை மீண்​டும் தனது கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வர நினைத்த ராமதாஸ், தனது வயது, உடல்​நிலையை பொருட்​படுத்​தாமல் தீவிர கட்சி பணியில் ஈடுபட தொடங்​கினார். கடந்த நாடாளு​மன்ற தேர்​தலின்​போது இருவரும் தனித்​தனியாக கூட்டணி பேச்சு​வார்த்​தை​யில் ஈடுபட்​டனர். கூட்டணி விவகாரத்​தில் இருவருக்​கும் இடையே கடும் வாக்கு​வாதம் ஏற்பட்ட நிலை​யில், இறுதி​யில் அன்புமணியே வெற்றி பெற்​றார். அவரது விருப்​பப்படியே பாஜக​வுடன் பாமக கூட்டணி வைத்​தது.

அந்த தேர்​தலில் தருமபுரி தொகு​தி​யில் தனது மனைவி சவுமி​யாவை வேட்​பாளராக அன்புமணி நிறுத்​தியது கடும் விமர்​சனத்​துக்​குள்​ளானது. முதலில் மகன் அன்புமணி, இப்போது மருமகள் சவுமியா வந்துள்ளார் என்றும், ராமதாஸ் சொன்னது என்ன ஆனது எனவும் பலர் விமர்​சனம் செய்​தனர். அந்த தேர்​தலில் போட்​டி​யிட்ட 10 தொகு​தி​களி​லும் பாமக தோல்வி அடைந்​தது. இதனால், ராமதாஸுக்​கும், அன்புமணிக்கு இடையே கருத்து வேறு​பாடு அதிகரித்து, இருவருக்​கும் இடையேயான பேச்சு​வார்த்​தை​யும் குறைந்​ததாக கூறப்​படு​கிறது.

ஜி.கே.மணி மகனுக்கு கட்சி​யில் பொறுப்பு வழங்​கிய​தி​லும், கூட்டணி பேச்சு​வார்த்​தை​யிலும் பின்னடைவை சந்தித்த ராமதாஸ், கட்சியை தனது கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வருவதற்கான வாய்ப்​பாக, டிசம்பர் 28-ம் தேதி புதுச்​சேரி​யில் நடக்​கும் பாமக​வின் புத்​தாண்டு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்தை பயன்​படுத்தி கொள்ள முடிவு செய்​தார்.

அதன்​படி, நேற்று நடந்த பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள கட்சி​யின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்​வாகி​களும், கட்சி​யின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்பு​களின் நிர்​வாகி​களும் கலந்து கொண்​டனர்.

ராமதாஸின் வலது புறம் அன்புமணி​யும், இடது புறம் ஜி.கே.மணி​யும் அமர்ந்​திருந்​தனர். கூட்​டத்​தில் ராமதாஸ் திட்​ட​மிட்​டபடி, ஜி.கே.மணி மகன் ஜி.கே.எம்​.தமிழ்க்​குமரன் ராஜினாமா செய்​த​தில் இருந்து காலியாக இருக்​கும் கட்சி​யின் இளைஞர் அணி தலைவர்பொறுப்​பில், தனது மூத்த மகள் காந்​தி​ம​தி​யின் மகனும், பேரனு​மாகிய முகுந்தன் என்பவரை நியமிக்​கிறேன். அவர் இன்று முதல் அந்த பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு உதவியாக இருப்​பார் என்று அறிவித்​தார்.

இதற்கு மேடை​யிலேயே கடும் எதிர்ப்பு தெரி​வித்த அன்புமணி, அவர் 4 மாதத்​துக்கு முன்​பு​தான் கட்சிக்கு வந்துள்ளார். அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி என்றால், அவருக்கு என்ன அனுபவம் இருக்​கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிக்க வேண்​டும் என்றார். அதற்கு ராமதாஸ், நான் சொல்வதை தான் கேட்க வேண்​டும். இது நான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்​க​வில்லை என்றால், யாரும் கட்சி​யில் இருக்க முடி​யாது. நான் மீண்​டும் சொல்​கிறேன். கட்சி​யின் மாநில இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்​கப்​படு​கிறார் என்றார்.

அப்போது அன்புமணி, “குடும்பத்​தில் இருந்து இன்னொன்னா. என்ன சொல்​றது” என்று கூறி​விட்டு கையில் இருந்த மைக்கை தூக்​கிப் போட்​டார். தொடர்ந்து அவர் பேசும்​போது, “சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்​பித்து வைத்​திருக்​கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்​கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்​ளலாம்” என்றார்.

இதையடுத்து ராமதாஸ், “இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான். அவர் உனக்கு உதவியாக இருக்க போகிறார். இதை யாரும் மாற்ற முடி​யாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால் அவ்வளவு தான். வேறு என்ன சொல்​வது. முகுந்தன் தலைவர். நான் சொல்வதை தான் கேட்க வேண்​டும். நான் தொடங்கிய கட்சி. நான் சொல்வதை தான் செய்​யனும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்​ளுங்​கள். யாராக இருந்​தா​லும். விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்​காதவர்கள் விலகி கொள்​ளலாம்” என்றார்.

கட்சியை மீண்​டும் தனது கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வருவ​தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ராமதாஸ், பொதுக்​குழு மேடையை தனக்கு சாதகமாக பயன்​படுத்​தி​யுள்ளதாக அரசியல் நோக்​கர்கள் கருத்து தெரி​வித்​துள்ளனர். இதுவரை வெளியே தெரி​யாமல் நடந்து வந்த இருவருக்​கும் இடையேயான கருத்து வேறு​பாடு, வாக்கு​வாதங்​கள், தற்போது பொதுக்​குழு கூட்ட மேடை​யில் வெளிப்​படையாக அரங்கேறியதுடன், இருவரும் வாக்கு​வாதத்​திலும் ஈடுபட்ட சம்பவம் கூட்​டத்​துக்கு வந்திருந்த நிர்​வாகி​கள், தொண்​டர்களை அதிர்ச்சி அடைய செய்​தது. தந்தைக்​கும், மக​னுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள இந்த கருத்து வேறு​பாடு ஓரிரு நாளில் சரி​யாகி​விடும்​ என்​றும்​ கட்​சி​யினர்​ தெரி​விக்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x