Published : 28 Dec 2024 09:24 PM
Last Updated : 28 Dec 2024 09:24 PM

“அண்ணாமலையின் ‘பஞ்சு சாட்டை’ நாடகம் வெட்கக்கேடானது!” - கனிமொழி எம்.பி விமர்சனம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் கனிமொழி எம்.பி

ராமநாதபுரம்: பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழகத்துக்கு தலைகுனிவு செயல் என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட திமுக மண்டல ரீதியாக இணைந்த ஐடி விங் கூட்டம் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பெரியகருப்பன், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஐடி விங் மாநில துணை செயலாளர் விஜய கதிரவன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேசியதாவது: தகவல் தொழில்நுட்பம் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்கள், இன்று தேர்தலையே மாற்றக்கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐடி முறையை முதன் முதலில் தேர்தலில் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் ஒபாமா.

பாஜகவின் மாநில தலைவர் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவான செயல். மத்திய நிதி அமைச்சர் ஒவ்வொரு முறையும் பேசும் போது ஒன்றை மறக்காமல் சொல்கிறார். அது இந்தி படிக்கவில்லை என்று, ஆனால் அவரது கல்வி சான்றிதழில் இந்தி படித்திருப்பதை மறைத்து கூறி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய குற்றவாளி ஆவார். அப்பொழுதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த தவறை செய்திருக்க மாட்டார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காத அதிமுகவினர் இன்று நின்று கொண்டு கூவுகிறார்கள்.

திமுக ஒரு மாநில கட்சியாக நினைத்துக் கொள்ளக்கூடிய இடத்தில் இல்லை. நாட்டின் தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் உள்ளது. அதனை தீர்மானிக்கக் கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

நீங்கள் சுதந்திரமாக நீங்கள் நினைத்தபடி வாழக்கூடிய சமூகத்தை தான் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பரமக்குடி முருகேசன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன், மானாமதுரை தமிழரசி, மேயர்கள் தூத்துக்குடி ஜெகன் பெரியசாமி, சிவகாசி சங்கீதா இன்பம் போலிட்டோ கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x