Published : 28 Dec 2024 08:33 PM
Last Updated : 28 Dec 2024 08:33 PM
ராமேசுவரம்: இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய, இலங்கை இரு நாட்டு பிரச்சினைகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதுடன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவரது மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகளை இரு நாட்டு மீனவர்களும், இருநாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். சமீபத்தில் இலங்கை அதிபர் அநுர குமார இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகையில் மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார். அது விரைவில் நடக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்திலும், இலங்கையில் ஏற்ற பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்திய மற்றும் சீன அரசுகள் இலங்கைக்கு பெரும் தொகையை நிதியாக அளித்ததால் இன்று இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. எனவே இரு நாடுகளுடன் இலங்கை தொடர்ந்து நட்புடன் இருந்து வருகிறது. இலங்கையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாகாண தேர்தல்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூட்டணி நிலைப்பாட்டை கட்சி முக்கிய தலைவருடன் பேசி விரைவில் அறிவிக்கும்” என்றார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT