Published : 28 Dec 2024 07:19 PM
Last Updated : 28 Dec 2024 07:19 PM
விழுப்புரம்: பாமக இளைஞர் சங்கத் தலைவாராக, அக்கட்சியின் மாநில ஊடகப் பிரிவு செயலாளரான முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கட்சித் தலைவர் அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட கருத்து மோதலால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார்.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை அக்டோபர் மாதம் ராமதாஸ் வழங்கினார். அடுத்த 3 மாதத்தில், அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டு தனது பதவியை தமிழ் குமரன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார். அவர் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் முகுந்தனை காணலாம்.
இந்நிலையில், இன்று (டிச.28) வானூர் அருகே பட்டானூரில் பாமக சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி பேசி முடித்த பின், ஏற்கெனவே பேசிய ராமதாஸ் மீண்டும் மைக்கை பிடித்து பேசும்போது, “பொதுவாக தலைவர்களுக்கு நல்ல உதவியாளர்கள் தேவை. எனது உதவியாளர்களை அனுப்பி விட்டேன். நானே இப்போது லேண்ட் லைன் அருகில் அமர்ந்துகொண்டு போன் அடிக்கிறேன். நான் நல்ல ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை சொல்கிறேன்.
கட்சியின் தலைவர் அன்புமணிக்கு 100 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். அதற்காக பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன். அவர் எல்லா வகையிலும் அன்புமணிக்கு உதவியாக இருப்பதற்காக இதை அறிவிக்கிறேன். முகுந்தன் இன்று முதல் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்” என்றார்.
அப்போது மேடையிலிருந்த மைக்கை எடுத்து பேசிய அன்புமணி, “எனக்கு உதவியா? வேண்டாம். அவன் 4 மாதம் முன்புதான் வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் உள்ளது? அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? நல்ல அனுபவசாலியாக போடுங்கள்” என்றார். அதற்கு பதிலளித்து ராமதாஸ் கூறும்போது, “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கலைன்னா, யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இதுநான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது” என்றார்.
அதற்கு அன்புமணி மெல்லிய குரலில் “அது சரி” என்றார். மீண்டும் ராமதாஸ் பேசும்போது, “சரின்னா போ... முகுந்தன் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கை தட்டுங்கப்பா” என்றவர், ஜி.கே.மணியிடம் நன்றி தெரிவிக்கும்படி கூறினார். இதனால் ஆவேசமடைந்த அன்புமணி கையிலிருந்த மைக்கை ராமதாஸ் முன்பிருந்த டீபாயில் வீசினார். பின்னர் மீண்டும் மைக்கை எடுத்த அன்புமணி, “சென்னை பனையூரில் எனக்கு ஒரு புதிய அலுவலகம் ஆரம்பித்துள்ளேன். அங்கு எல்லோரும் வந்து என்னை பார்க்கலாம். அதன் தொலைபேசி எண் 044-46060628. குறித்துக் கொள்ளுங்கள். தொடர்பு கொள்ளுங்கள், என்னை வந்து எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்றார்.
இதனை தொடர்ந்து ராமதாஸ் கூறும்போது, “மீண்டும் சொல்கிறேன், உங்கள் மாநில இளைஞர் சங்க தலைவர் முகுந்தன். இன்னொரு அலுவலகம் திறந்து நடத்துங்கள், ஆனால் முகுந்தன் உதவியாக இருப்பார். விருப்பம் இல்லாவிட்டால், அவ்வளவுதான், வேறு என்ன சொல்லமுடியும்? முகுந்தன்தான் தலைவர், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள், யாராக இருந்தாலும். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சை கேட்காதவர்கள் விலகிக்கொள்ளலாம்” என்றார். இதன்பின் அன்புமணி அமைதியாக அமர்ந்திருந்தார். ராமதாஸ் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஜி.கே.மணி, அனைவரும் உணவருந்திவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். இளைஞர் சங்கத்தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன் கூட்டம் முடியும்வரை மேடை ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT