Published : 28 Dec 2024 06:40 PM
Last Updated : 28 Dec 2024 06:40 PM
தமிழக அரசியல் களம் காணாத போராட்டங்கள் இல்லை. ரயில் மறியல் போராட்டங்கள், நடை பயணங்கள், உண்ணாவிரதங்கள் தொடங்கி உயிர்த் தியாகம் செய்வது வரை போராட்டங்களைக் கண்ட நீண்ட வரலாறு கொண்டது தமிழ் மண்ணின் அரசியல் களம். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்று கூறுவது போல் சாட்டையடி போராட்டத்தை கையிலெடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கூடவே தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை காலில் செருப்பு அணிவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார். தனது போராட்டத்தைப் பற்றி அண்ணாமலையே விளக்கியபோது, “உடலை வருத்திக் கொண்டு வேண்டுதல் வைப்பது தமிழ் மண்ணின் மரபு” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை முன்னெடுத்துள்ள ‘சாட்டையடி’ போராட்டமும், ‘செருப்பு துறப்பு’ சபதமும் அரசியல் களத்தில் கவனம் பெறுவதோடு பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. கூடவே ‘சாட்டையடி’ அரசியல் பாஜகவுக்கு சாதகமா, பாதகமா என்ற மிக முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. முதலில் இந்தக் கேள்வியை பாஜகவின் விளக்கத்தில் இருந்தே அணுக ஆரம்பிக்கலாம். “மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டவும், அடுத்த தலைமுறை சீரழிந்து போவதை தடுத்து பாதுகாத்து, குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க, தன்னை வருத்திக்கொண்டு, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு விழிப்புணர்வு போராட்டத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்று அவர் எடுத்த முடிவு தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு” என்று தமிழக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களின் பார்வை: பாஜகவின் இந்தக் கருத்தை முன்வைத்து சாமான்ய மக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பகிர்ந்த பார்வைகளின் தொகுப்பு:
இவ்வாறாக விரிகிறது மக்கள் கலவையான விமர்சனங்கள். அரசியல் தலைவர்களும் இதேபோல் தங்களின் பார்வைகளை முன்வைத்துள்ளனர். “அரசியல் தலைவர்களுக்கு என போராட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தானதாக இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கையை பாஜகவில் இருக்கும் தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை ஆற்றியிருந்தார்.
“அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜகதான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்காக அவர் பெரிதும் முயற்சிக்கிறார்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“ஒருவர் தன்னை வருத்திக் கொண்டு மக்கள் விரோதப் போக்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உணர்வுபூர்வமாக சொல்லும்போது அதை கேலியா நினைத்துப் பேசுபவர்களால் தமிழகத்துக்கு வரும் காலங்களில் எந்தப் பிரயோஜனமும் இருக்க முடியாது” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அண்ணாமலையை ஆதரித்துள்ளார். அதேவேளையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கவும் இல்லாமல், விமர்சிக்கவும் இல்லாமல் கேள்வியையே புறந்தள்ளி நழுவிக் கொண்டார்.
இதற்கிடையில் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைதளத்தில், அண்ணாமலைக்கு சில கேள்விகள் என்றொரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மணிப்பூர் சம்பவத்தின்போது நீங்கள் அமைதி காத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறாக, அரசியல் தலைவர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். தமிழகம் தாண்டி கர்நாடக பாஜக கூட அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடக பாஜக தலைவர் விஒய் விஜயேந்திரா, “அண்ணாமலையின் தனித்துவமான, உணர்வுபூர்வமான போராட்டம் சில விஷமிகளால் விமர்சிக்கப்படுகிறது. அனால் நூதனமான, அர்த்தமுள்ள போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலைக்கு வெற்றி! - இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, “அண்ணாமலை தன் மீது கவனம் குவிய வேண்டும் என்றே எதிர்பார்த்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சி அரசியலில் பிரதானமாக இருப்பது ‘அதிமுக அல்ல, பாஜக’ என்பதை நிறுவ முயற்சிக்கிறார். அந்த வகையில் அவர் முயற்சிக்கு இந்த சாட்டையடிப் போராட்டம் வெற்றியைக் கொடுத்துள்ளது. அண்ணாமலை போராட்டத்தை அதிமுக ஆதரவாளர்கள் விமர்சிக்கக் காரணமும், அதிமுகவின் இடத்தை அண்ணாமலை எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான்.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் செல்வாக்கை அண்ணாமலை தகர்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ள வேண்டும் என்பதே அண்ணாமலையின் வியூகம். அண்ணாமலையில் நகர்வுகளுக்கு மோடி - அமித் ஷா - நட்டா அனுமதி கிடைத்திருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு, முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை, மாநில அரசுக்கு உரிய நிதி பகிர்வு என திமுக நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் நிலையில் இருந்தது. இந்த இடைவெளியை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியை விமர்சித்து எதிர்க்கட்சி அரசியலை கையில் எடுத்திருக்கிறார். இது அண்ணாமலைக்கு, அவர் மூலம் பாஜகவுக்கு சாதகமான போக்கு தான்” என்று கூறினார்.
விஜய் வருகையையும் கவனத்தில் கொண்டு... - ஆனால், அண்ணாமலையின் இத்தகைய அரசியல், தமிழகம் போன்ற மாநிலத்தில் செல்லுபடியாகாது எனக் கூறுகிறார் இன்னொரு அரசியல் நோக்கர். “2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம், இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலை தனக்கு நல்ல எதிர்காலத்தை கூட வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற போராட்டங்கள் அவர் மீது விழவேண்டிய நம்பிக்கையை தவிடுபொடியாக்குமே தவிர அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவைக் கருத வைக்காது.
தமிழக அரசியலில் விஜய்யின் வருகையையும் மனதில் வைத்துக் கொண்டு அண்ணாமலை தனது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று குரல் கொடுத்து நிறுவிக் கொள்ள சாட்டையடி, செருப்பு துறப்பு எல்லாம் போதாது. ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி செய்யக்கூடிய காரியமா என்ற எதிர்மறை விளைவுகளையே இவை ஏற்படுத்தும். அரசியல் போராட்டங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர மீம் க்ரியேட்டர்களுக்கான கன்டென்ட்டாக மாறிவிடக் கூடாது.
மேலும், போராட்டத்துக்கு தமிழ் மரபு, முருகக் கடவுள் வழிபாடு என்றெல்லாம் காரணம் கூறுவதும், அவருக்கான அபிமானத்தை பெருக்க, தமிழகத்தில் பாஜகவுக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க உதவாது. மேலும் சிறுபான்மையின மக்களை பாஜகவிலிருந்து இன்னும் சற்று விலகியே இருக்கத் தூண்டும். கடந்த மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டது. இத்தகையச் சூழலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அதிமுக அல்ல, பாஜக என்று நிறுவ இத்தகைய சாட்டையடி அரசியலை கையில் எடுப்படு மலையை ஊசியால் நகர்த்தும் முயற்சிக்கு நிகரானது. இன்னும் விசாலமான பார்வையோடு, அர்த்தமுள்ள போராட்டங்கள் தேவை” என்று அவர் தன் வாதத்தை முன்வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ல் நடைபெறவிருக்கிறது. 15 மாதங்களுக்கு முன்னரே அண்ணாமலை ஆளும் கட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப்போவதில்லை என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது என்ற அண்ணாமலையின் அறைகூவலாகக் கூட இது இருக்கலாம். இவை, தேர்தலில் வாக்குகளாக மாறுகிறதோ இல்லையே ஒரு சிற்றலை விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்று இப்போதைக்கு புரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT