Last Updated : 28 Dec, 2024 03:59 PM

3  

Published : 28 Dec 2024 03:59 PM
Last Updated : 28 Dec 2024 03:59 PM

‘ஜாமீன் அமைச்சர்’, ‘வேலை இல்லாதவர்கள்’ - மீண்டும் வெடிக்கும் அண்ணாமலை - செந்தில் பாலாஜி மோதல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சுக்கு செந்தில் பாலாஜி பில் கேட்டதற்குப் பின்னால் அண்ணாமலை சந்திரமுகியாகவே மாறிப்போனார். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற பிறகு வேறு பக்கம் கவனத்தைத் திருப்பிய அண்ணாமலை, இப்போது மீண்டும் செந்தில் பாலாஜியை சீண்ட ஆரம்பித்திருக்கிறார். பதிலுக்கு பாலாஜியும் பதிலடி கொடுத்து வருகிறார்.

செந்​தில் ​பாலாஜி சிறை​யில் இருந்த சமயத்​தில் கோவை மக்கள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அண்ணாமலை எதிர்​பார்த்த வெற்றியைப் பெறமுடிய​வில்லை. ஆனால், சிறைக்​குள் இருந்​தா​லும் வேட்​பாளர் தேர்வு உட்பட அனைத்​தை​யும் ரிமோட் கன்ட்​ரோலில் சாதித்து அண்ணா​மலைக்கு செக் வைத்​தார் செந்​தில் ​பாலாஜி. தேர்தல் முடிந்​ததும், ‘ஆக்​டீவ்’ அரசி​யலுக்கு லீவு​விட்டு அரசியல் படிப்​ப​தற்காக லண்டன் சென்​றார் அண்ணா​மலை. அந்த சமயத்​தில் ஜாமீனில் விடு​தலையான செந்​தில்​ பாலாஜி மீண்​டும் ‘ஆக்​டீவ்’ அரசி​யலுக்​குள் வந்தார்.

தொலைநோக்​குத் திட்​டத்​துடன் மீண்​டும் அவரையே கோவைக்கான பொறுப்பு அமைச்​சராக நியமித்தது திமுக தலைமை. இந்தநிலை​யில், 3 மாத படிப்பை முடித்து​விட்டு டிசம்பர் 1-ல் தாயகம் திரும்​பி​னார் அண்ணா​மலை. இதையடுத்து செந்​தில்​பாலாஜிக்​கும் அவருக்​குமான வார்த்​தைப் போர் மீண்​டும் சூடு​பிடிக்கத் தொடங்​கி​யுள்​ளது. அண்மை​யில் கோவை​யில் செய்தி​யாளர்​களிடம் பேசிய அண்ணா​மலை, “ஜாமீன் அமைச்சர் செந்​தில்​பாலாஜி அதானி விவகாரம் குறித்து கேட்​டால் அதற்கு பதிலளிக்க வேண்​டும். நான் லண்ட​னுக்கு படிக்கச் சென்​றிருந்த போது, ஜாமீன் அமைச்சர் புழல் சிறை​யில் கம்பி எண்ணிக் கொண்​டிருந்​தார்.

உண்மையை கூறியதற்காக என் மீது வழக்​கா?” என சீண்​டி​னார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்​தில்​பாலாஜி, “சிலருக்கு எந்த வேலை​யும் இல்லை. வேலை இல்லாதவர்கள், அரசி​யலில் முகவரி இல்லாதவர்​கள், தொடர்ந்து மக்களால் தோற்​கடிக்​கப்​படு​பவர்கள் தனது இருப்​பைக் காட்ட, மக்களிடம் வெளிச்சம் பெற என்னவெல்​லாமோ பேசுகிறார்​கள்” என்று அண்ணா​மலையை போட்டுத் தாக்​கி​னார்.

இதுகுறித்து பேசும் கோவை​யின் அரசியல் பார்​வை​யாளர்​கள், “அண்ணா​மலை​யும் செந்​தில்​ பாலாஜி​யும் மீண்​டும் வார்த்தை வார் நடத்த ஆரம்​பித்து​விட்​டார்​கள். மக்கள​வைத் தேர்​தலில் கணிசமான வாக்​கு​களைப் பெற்ற அண்ணாமலை சட்டமன்றத் தேர்​தலிலும் கோவை​யிலேயே போட்​டி​யிடும் திட்​டத்​தில் இருக்​கிறார். அதேபோல், கடந்த முறையைப் போல் இல்லாமல் இம்முறை கோவை மாவட்​டத்​தி​லுள்ள 10 தொகு​தி​களி​லும் திமுக-வை ஜெயிக்​க​வைத்து தலைமை​யிடம் சபாஷ் பெற திட்​ட​மிடு​கிறார் செந்​தில்​பாலாஜி. இருவருமே தாங்கள் நினைத்ததை முடிக்க எந்த எல்லைக்​கும் போவார்​கள்” என்கிறார்​கள்.

இதுகுறித்து பேசிய பாஜக மாநில பொதுச்​செய​லாளர் ஏ.பி.​முரு​கானந்​தம், “சட்​டம்​-ஒழுங்கு சீர்​கேடு, அரசின் நிர்வாக சீர்​கேடு ஆகிய​வற்றை திசை திருப்​பவே, இதுபோன்ற வார்த்தைப் போர்களை அவர்கள் துவக்கு​கின்​றனர். அதேசம​யம், பாஜக-வுக்கு தங்களது ஆதரவை அளிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். ஓட்டுக்கு பணம் தர மாட்​டேன் என பகிரங்​கமாக கூறி தேர்தலை எதிர்​கொண்​டவர் அண்ணா​மலை. பாஜக எங்கு உள்ளது என்று கேட்​ட​வர்​கள், இன்று பாஜக-வை பற்றி​யும், அண்ணா​மலையை பற்றி​யும் பேசாமல் அரசியல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்​பட்​டுள்​ளனர்” என்றார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலா​ளரான நா.கார்த்திக் நம்மிடம், “2021 சட்டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அமைச்சர் செந்​தில் ​பாலாஜி தலைமை​யில் கோவை​யில் உள்ளாட்​சித் தேர்தலை எதிர்​கொண்டு 96 சதவீதம் வெற்றி பெற்​றோம். மக்கள் திமுக பக்கம் நிற்பதை பொறுத்​துக் கொள்ள முடி​யாமல் அண்ணாமலை திமுக குறித்​தும், அமைச்சர் செந்​தில்​பாலாஜி குறித்​தும் அவதூறு கருத்துகளை பேசுகிறார். மக்கள் பாஜகவை நிராகரித்து​விட்​டனர்.

யாரும் நெருங்​கிப் பார்க்க முடியாத அளவுக்கு, திமுக மக்கள் செல்​வாக்கு பெற்றுள்​ளது. இதை பொறுத்​துக்​கொள்ள முடியாத அண்ணா​மலை, தனது இருப்பை காட்​டிக் கொள்ள தொடர்ந்து அவதூறு பேசி வரு​கிறார்” என்​றார். பழையன மறந்து ​தி​முக-வை வீழ்த்த ​பாஜக-வுடன் அ​திமுக கூட்​டணி அமைக்​கலாம் என்ற பேச்சு பலமாக அடிபடு​கிறது. அப்படி அமைந்​தால் அண்ணாமலை - செந்​தில்​பாலாஜி மோதல் இன்னும் உக்​ர​மாகலாம் என்​ப​தை இப்​போதே உணரமுடிகிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x