Published : 28 Dec 2024 02:02 PM
Last Updated : 28 Dec 2024 02:02 PM

“மத்திய அமைச்சராக எல்.முருகன் சாதித்தது என்ன?” - ஒப்பீட்டுப் பார்வையுடன் ஆ.ராசா சாடல்

ஆ.ராசா | கோப்புப்படம்

சென்னை: “மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசு அமைந்தால், அதன் ஆட்சி அதிகாரத்தில் தமிழக எம்.பி-கள் இடம்பெற்றால், என்னவெல்லாம் நற்காரியங்கள் நடக்கும் என்பதற்கான சான்றுகள் மன்மோகன் சிங் ஆட்சியின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள். பிரதமர் அடிக்கல் நாட்டிய ஒரு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையே ஆறு ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மத்திய அமைச்சராக ஒற்றை ஆளாக முருகன் சாதித்தது என்ன என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்” என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பல கோடி குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்த பொருளாதார மீட்பர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.1990-களில் பொருளாதாரம் திக்கற்ற நிலையில் கிடந்த போது தாராளமயமாக்கல் கொள்கையைத் துணிச்சலோடு அமல்படுத்தி, இந்தியாவை எட்டுக்கால் பாய்ச்சலில் பயணிக்க வைத்தவர்.

மறைந்த முதல்வர் கருணாநிதி கட்டியெழுப்பிய கூட்டணியால் 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி நாற்பது இடங்களில் வென்றது. டெல்லிக்கு சென்று மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய கருணாநிதி பெரும் துணையாக நின்றார். அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் வெல்ல இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் பங்காற்றினார். அந்த இரண்டு தேர்தல்களிலும் வென்று திமுக கூட்டணி மத்தியில் அங்கம் வகித்ததற்கு கருணாநிதியும், ஸ்டாலினும் கருவிகளாக இருந்தார்கள்.

திமுக அங்கம் வகித்த 2004 -2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது எண்ணற்ற திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கினார். பத்தாண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக உள்ளிட்ட 21 தமிழர்கள் மத்திய அமைச்சர்களாக இடம் பெற்றனர். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என மிக அதிக அளவில் தமிழர்கள் கோலோச்சினார்கள். இன்றைக்கு மோடி அமைச்சரவையில் தமிழர்கள் நிலை என்ன என எண்ணிப் பார்த்தால், இந்த மகத்தான சாதனையை உணர முடியும்.

நிதி, நெடுஞ்சாலை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம் எனப் பல முக்கிய துறைகளை பெற்று, தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை மன்மோகன் சிங் ஆட்சியின் போது கொண்டு வந்தோம். தமிழ் செம்மொழியாக பிரகடனம். சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள். சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு.திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம். 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி. 32 சதவிகிதமாக இருந்த தொலைபேசி அடர்த்தி 80 சதவிகிதமாக உயர்வு. 3,276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.

ஒரகடத்தில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை ஆராய்ச்சி மையம். 1,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம். சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம். நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சென்னை மாநகரில் மெட்ரோ ரயில். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை.

இப்படி எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்துக்கு வரக் காரணமாயிருந்தார் மன்மோகன் சிங். ஏழை நடுத்தர இளைஞரின் உயர் கல்வி கனவை நனவாக்கிய உயர் கல்விக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம், வேலையின்மையால் கிராமப்புறத்தினர் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கோடு கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாய கல்வி உரிமை சட்டம் என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம்.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதற்கு நாற்பது வென்ற திமுக கூட்டணி எம்.பி-கள், நாடாளுமன்ற கேண்டினில் வடையும் பஜ்ஜியும்தானே சாப்பிடுவார்கள் என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டும் ஏளன பேச்சு பேசும் அரசியல் சூனியங்களுக்குக் கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் தமிழக எம்.பி-கள் என்னவெல்லாம் செய்தார்கள்? என்ற ஒரு பட்டியலை தமிழக முதல்வர் சொன்னார். அரசியல் அரைவேக்காடுகளுக்குக் கடந்த மாதம் நடந்ததும் தெரியாது கடந்த கால சாதனைகளும் புரியாது.

மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசு அமைந்தால், அதன் ஆட்சி அதிகாரத்தில் தமிழக எம்.பி-கள் இடம் பெற்றால், என்னவெல்லாம் நற்காரியங்கள் நடக்கும் என்பதற்கான சான்றுகள் மன்மோகன் சிங் ஆட்சியின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.

பிரதமர் அடிக்கல் நாட்டிய ஒரு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையே ஆறு ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு மோடி ஆட்சி என்ன செய்தது? என்பதை ஒற்றை செங்கல் சாட்சியாக நிற்கிறது. தமிழகத்தின் மத்திய அமைச்சராக ஒற்றை ஆளாக முருகன் சாதித்தது என்ன என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

“இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பது எனது கல்வியால் தீர்மானிக்கப்பட்டது” என்றார் மன்மோகன் சிங். கல்விதான் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றும் ஆயுதம் என அதன்படியே தன் வாழ்வை அமைத்து, அதன் வழியே நல்லாட்சி நல்கி இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார் மன்மோகன் சிங்.

‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்’ என்ற ஔவையின் வாக்கில், மாசறக் கற்றவனே மன்னனாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங். அவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு என்றும் அவரை நினைவில் வைத்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x