Published : 28 Dec 2024 06:30 AM
Last Updated : 28 Dec 2024 06:30 AM
அரக்கோணம்: நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (34).
இவர், சென்னை தலைமை செயலகத்தில் உள்வட்ட பாதுகாப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை விட்டு ரயில் மூலமாக வேலைக்கு செல்வது வழக்கம்.
வழக்கம்போல நேற்று அதிகாலையில் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி சென்றார். அப்போது, ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்புறமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார். விடியற்காலை நேரம் என்பதால் அடுத்தடுத்த வாகனங்கள் அவர் உடல் மீது ஏரி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வழியாக சென்றவர்கள் நெமிலி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த செந்தில்வேல் உடலைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், உயிரிழந்த செந்தில்வேல் குடும்பத்துக்கும், அவருடன் பணியாற்றும் சக காவல்துறை ஊழியர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதிஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT