Published : 28 Dec 2024 06:15 AM
Last Updated : 28 Dec 2024 06:15 AM

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதிக்க வணிகர்கள் வலியுறுத்தல்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் பெரும்பாலும் குறு நிறுவனங்களாக உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இத்தொழில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் உற்பத்தி, வைத்திருத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்தவை. அதனால் இதன் உற்பத்திக்கு அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், மேற்கூறிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் மாசுக்கட்டுப்பாடு வாரியம், மேற்கூறிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய கடந்த 11 மாதங்களாக அனுமதி வழங்கவில்லை. இதனால் இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மட்டுமல்லாது, எத்தகைய பிளாஸ்டிக் இருந்தாலும், மாநகராட்சி நிர்வாகம் அதை பறிமுதல் செய்து ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் கடைகளுக்கான தொழில் உரிமம் ரூ.650-லிருந்து, ரூ.3,080 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற, கொடி நாள் நிதியாக ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை கேட்கின்றனர்.

இவற்றையெல்லாம் கண்டித்து சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x