Published : 28 Dec 2024 06:08 AM
Last Updated : 28 Dec 2024 06:08 AM
சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதால் தொடக்கவிழா எளிய முறையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, எம்எல்ஏ.க்கள் பரந்தாமன், சிவிஎம்பி எழிலரசன், ஏஎம்வி பிரபாகர் ராஜா, துணைமேயர் மகேஷ்குமார், பொது நூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், பபாசி துணைத்தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் டபிள்யூ.ஜெ.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தகக் காட்சியில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து அரங்குகளிலும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலைநாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சியை பார்வையிடலாம்.
நுழைவு கட்டணம் ரூ.10. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். புத்தகக் காட்சியையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஜன.7-ம் தேதி காலை 8.30 மணிக்கு ஓவியப் போட்டியும், 8-ம் தேதி காலை 8 மணிக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஜன.12-ம் தேதி நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொள்கிறார்.
சுயஉதவிக் குழு கண்காட்சி: முன்னதாக, புத்தகக் கண்காட்சி அரங்கம் அருகே மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை (சரஸ் மேளா) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் (வீட்டு உபயோக பொருட்கள்) இடம்பெற்றுள்ளன. ஜன.9-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT