Published : 28 Dec 2024 07:01 AM
Last Updated : 28 Dec 2024 07:01 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்டிக்கு (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்தில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதற்கும் தமிழக அரசும், உயர்கல்வித் துறையும், பல்கலைக்கழக நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தரும்.
சட்டம் தனது கடமையைச் செய்து விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், மாணவிக்கு நேர்ந்த பிரச்சினையை அரசியலாக்க சிலர் முயல்கின்றனர். நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவத்தை ஒரு படிப்பினையாகக் கொண்டு வரும் காலத்தில் செயல்படுவோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் அந்த நபர் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்துபோயுள்ளார். அதனால், அவர் மீது பாதுகாப்பு ஊழியர்களுக்கு சந்தேகம் எழவில்லை.
நடந்த தவறு தவறுதான். தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளோம். இனி இத்தகைய குற்றங்கள் நிகழாது என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்டிக்கு புகார் வரவில்லை. காவல்துறையில் புகார் பெறப்பட்டு அதன் அடிப்படையில்தான் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் கண்காணிப்பு கேமராவுக்கு உட்படாத பகுதி. இந்த சம்பவத்துக்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் எந்த இடமும் இருட்டாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு தேவையான மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெளிநபர்கள் யார் வந்தாலும் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பதிவு செய்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்று சொல்லியுள்ளோம்.
இனிவரும் காலத்தில் கல்வி வளர்ச்சிக்கு எந்தெந்த வழிகளில் ஆய்வு மேற்கொள்கிறோமோ, அதேபோல், போஷ் கமிட்டியின் செயல்பாடுகள் என்ன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆய்வு செய்யுமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...