Published : 28 Dec 2024 06:04 AM
Last Updated : 28 Dec 2024 06:04 AM
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோட்டூர், மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.அவரது குற்ற பின்னணி குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கைதான ஞானசேகரனின் தந்தைக்கு பூர்வீகம் மதுராந்தகம். அவர் அங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை கோட்டூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். அங்குதான் ஞானசேகரன் பிறந்துள்ளார். தட்டுத் தடுமாறி டிப்ளமோ இன்ஜினியரிங் வரை படித்துள்ளார். சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஞானசேகரன், பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் கண்டித்த நிலையில், அவர் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே பிரியாணி சமைத்து, சாலையோரம் விற்பனை செய்துள்ளார். விற்பனை கைகொடுக்கவே, படிப்படியாக பிரியாணி தொழிலை விரிவு படுத்தி உள்ளார். சென்னையில் அடையாறு காந்தி நகர், கோட்டூர் உட்பட 3 இடங்களில் நடைபாதைகளில் நடமாடும் வாகனத்தில் பிரியாணி விற்பனை செய்துள்ளார்.
வருமானம் அதிகரித்த நிலையில் ஞானசேகனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதும் இதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்ததும் தெரியவந்துள்ளது. இதுதவிர, அடுத்தடுத்து 3 திருமணம் (சட்டப்பூர்வமாக
அல்ல) செய்துள்ளார். இதில், முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.
இதில் ஒரு மனைவி, சென்னை அண்ணா பல்கலைக்கழக உணவு விடுதியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். பணம் மற்றும் தொழில் தொடர்புகள், ஞானசேகனுக்கு அரசியல் வட்டார தொடர்புகளையும் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், கட்சி போராட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஞானசேகரனே பிரியாணி சப்ளை செய்துள்ளார். இதற்கிடையில், அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்தது, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது போன்றவற்றால் ஞானசேகரன் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையான வழக்குகள் திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகள்.
அரசியல் தொடர்பு, காவல் நிலைத்துக்கு வழக்கு தொடர்பாக சென்று வருவது போன்றவற்றால் அவருக்கு எதிராக எவரும் புகார் அளிக்க முன்வருவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி தொடர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் மனைவி உட்பட பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரது செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் போலீஸார் ஆய்வு செய்தபோது, சுமார் 50 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில், அவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் பதிவிறக்கம் செய்த வீடியோக்களும் இருந்துள்ளன.
இந்நிலையில், ஞானசேகரனின் பின்னணி, இவருக்கு உதவியாக, உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்ற பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான முதற்கட்ட பணி தொடங்கி உள்ள தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரனால் மேலும் 3 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT