Published : 23 Jul 2018 08:51 AM
Last Updated : 23 Jul 2018 08:51 AM

சமையல் காஸ் 2-வது சிலிண்டர் பெற ரூ.206  நிர்வாக கட்டணம்: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மானிய விலையில் வழங்கப்படும் 2-வது சமையல் காஸ் சிலிண்டரைப் பெற நிர்வாக கட்டணமாக ரூ.206.50 செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ள னர். பெரும்பாலும் புதிய இணைப்புகளை பெறும்போது ஒற்றை சிலிண்டர் இணைப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பிறகு, எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கும் போது 2-வது சிலிண்டருக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிதாக முதலாவது காஸ் சிலிண்டர் இணைப்பை பெற 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு வைப்புத் தொகை ரூ.1450, 1.2 மீட்டர் நீளம் கொண்ட குழாய் ரூ.170, ரெகுலேட்டர் ரூ.150 என செலுத்த வேண்டும். மேலும் ஆவணங்கள் தயாரிப்பு நிர்வாக கட்டணமாக ரூ.88.50, நிறுவுதல் மற்றும் செயல் விளக்கத்துக்கான கட்டணமாக ரூ.118, பாஸ் புத்தகம் வழங்குவதற்கான நிர்வாக கட்டணமாக ரூ.59 என தனியாக ரூ.206.50 வசூலிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனம், சமையல் காஸ் வாடிக் கையாளர்களிடம், “2-வது சிலிண்டர் பெற காஸ் ஏஜென்சிகளை அணுகலாம்” என்று குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளது. அதில், 2-வது சிலிண்டருக்கான வைப்புத் தொகையாக ரூ.1450 மற்றும் நிர்வாக அல்லது நிறுவுதல் கட்டணமாக ரூ.206.50 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, “நிர்வாக கட்டணம் மற்றும் நிறுவுதல் கட்டணங்களை முதல் சிலிண்டர் வாங்கும்போதே செலுத்திவிட்ட நிலையில், மீண்டும் வாடிக்கையாளரிடம் கட்டணம் கேட்பது, மக்களை ஏமாற்றும் செயலாகும். 2-வது சிலிண்டரை வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அது வழக்கமாக நிரப்பப்பட்ட சிலிண்டரை கொண்டுவந்து கொடுப்பது போன்றுதான். அதை நாங்கள் அடுப்புடன் இணைத்துக்கொள்ளப் போகி றோம். காஸ் ஏஜென்சி வந்து நிறுவவோ, செயல் விளக்கம் காட்டவோ அவசியமே இல்லை. அதனால் நிர்வாக கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் என்.ரவி கூறும்போது, “இந்த நிர்வாக கட்டணம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற சமையல் எரிவாயு குறைதீர் கூட்டங்களில் பலமுறை புகார் தெரிவித்திருக்கிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பின் இயக்குநர் ஆர்.சரோஜாவிடம் கேட்டபோது, “2-வது சிலிண்டர் வழங்கும்போது, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கான விநியோக எண்ணிக் கையை உயர்த்துவது உள்ளிட்ட நிர்வாக பணிகள் இருக்கும். அதனால் ஆவண தயாரிப்பு நிர்வாக கட்டணத்தை செலுத்து வதில் தவறில்லை. ஆனால் நிறுவுதல், செயல் விளக்கம், புதிய புத்தகம் தருவதற்காக கட்டணம் வசூலிப்பது தவறு” என்றார்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “2-வது சிலிண்டர் பெற நிர்வாக கட்டணமாக ரூ.206.50 வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்தியன் ஆயில் நிறுவன தலைமை நிர்ணயித்துள்ளபடி தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற சமையல் காஸ் விநியோக நிறுவனங்களும் அப்படிதான் வசூலிக்கின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x