Published : 27 Dec 2024 06:21 PM
Last Updated : 27 Dec 2024 06:21 PM

“ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்” - திருநாவுக்கரசர்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.

திருச்சி: “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அஞ்சலி செலுத்திய பின்னர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பத்தாண்டுக் காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி வந்தபோது அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்திய நாட்டை மீட்டு தாராள பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தினார்.

இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு அடித்தளமாக அஸ்திவாரமாக திகழ்ந்தவர் மன்மோகன் சிங். மரணத்தை வெல்ல முடியாது. அவர் வாழ்கிற காலத்தில் எப்படி வாழ்ந்தார், என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். இந்தியாவை வளப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்'' என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ''அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்' படிக்க லண்டன் சென்று வந்துள்ளார். சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு மக்களை மகிழ்விப்பர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது.

கிண்டல், கேலியாக மக்கள் பார்க்கின்றனர். அவர் தொலைக்காட்சிக்கு முன் இரண்டு காலணியை அரைமணி நேரம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார். செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னால் மக்களுக்கு புரியாதா? ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். பார்க்கவே கோமாளி அரசியலை முன்னெடுக்கக் கூடாது. அவர் தன்னை மாற்றிக் கொண்டால் அவருக்கும் நல்லது, குடும்பத்திற்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது. இது எனது ஆலோசனை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x