Published : 27 Dec 2024 03:17 PM
Last Updated : 27 Dec 2024 03:17 PM
மதுரை: தொல்லியல் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட கோரி தொல்லியல் அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஒருங்கிணைப்பில் தொல்லியல் அறிஞர்கள் எ. சுப்ராயலு (கோவை), ர. பூங்குன்றன், (வேலூர்), நா.மார்க்சிய காந்தி, (சென்னை), ஆ.பத்மாவதி, (சென்னை), சு.இராசகோபால்( சென்னை), ச. செல்வராஜ், (தர்மபுரி),வெ.வேதாச்சலம், (மதுரை) கு.சேதுராமன், (மதுரை), மா.சந்திரமூர்த்தி, (சென்னை),கி.ஸ்ரீதரன், (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம் மேலூர்வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி எனும் சிற்றூர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டதாகும். இங்குள்ள கழிஞ்சமலை என்னும் மலையில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி (Tamil Brahmi) கல்வெட்டுகள் உள்ளன.
இது ஒரு தொன்மையான சமணத் தலமானதும் கூட. கி.பி 7-8ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவிக்கப்ப்படு ஒரு குடைவரை (சிவன்)கோயிலும் உள்ளது. இங்கு தமிழ் நாட்டில் மிக அருகில் நிலையில் கிடைக்கும் லகுலீசர் சிற்பம் ஒன்றும் குடைவிக்கப்பட்டுள்ளது.முன்னர்கூறிய தமிழி கல்வெட்டுகள் காணப்படும் இடத்தின் அருகிலேயே சுமார் 10 அடி தூரத்தில் மலையில் ஒரு சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் வெட்டப்பட்டு அதன் கீழ் அதனை வெட்டு வித்தவர் பெயரும் ஊரின் பழமையான பெயரும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்தில் உள்ளது.
'திருப்பிணையன் மலை பொற்கோட்டுக் காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்தத் திருமேனி பாதிரிக் குடியார் ரட்சை' என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம் ஆகும். இக்கல்வெட்டின் படி இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குடி என அழைக்கப்பட்டது என்பதும், இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும் இச்சிலையைச் செய்ய வைத்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் அறியப்படுகிறது.
இத்துடன் இவ்வூரில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் இருந்து அழிந்துள்ளது. இங்குள்ள கட்டுமான கற்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் ஐநூற்றுப் பெருந்தெரு என்ற பெயரில் ஒரு வணிகத் தலமாக இருந்தது வெளிப்படுகிறது. இதன் பின்னர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த ஒரு செப்பேடும் இருந்துள்ளது. இதில் இவ்வூரின் காவல் முக்கியத்துவம் இராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் வெட்டப்பட்டமை 1882 ஆண்டிலேயே ராபர்ட் சீவல் என்னும் ஆங்கிலேயே அறிஞரால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் பேசப்படும் மன்னர் இவர் ஆவார். மேலும் இக்கல்வெட்டுகளில் நந்தஸ்ரீ குவன் என்னும் சமண துறவி பெயரும் வெள்ளறை நிகமம் என்னும் வணிக நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டி என்னும் இவ்வூரில் மத்திய அரசு டங்ஸ்டன் இழை சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வளர்ச்சி என்ற முனைப்பில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு ஊறு நேரும் வகையிலும், என்றென்றைக்கும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழிந்துபடும் வகையிலும் செயல்படுத்தப்படும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம்.
எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டறிக்கை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பார்வைக்கும் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT