Last Updated : 27 Dec, 2024 01:03 PM

 

Published : 27 Dec 2024 01:03 PM
Last Updated : 27 Dec 2024 01:03 PM

'திரைப்படத்தை பிரபலமாக்க தடை கோருவது பேஷனாக மாறியுள்ளது' - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து 

மதுரை: ஒரு திரைப்படத்தை பிரபலமாக்க அதற்கு தடை கோரி வழக்கு தொடர்வது பேஷனாக மாறியுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வில், வழக்கறிஞர் கார்த்திக் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி, ஆர்.கே.பாலாஜி நடித்துள்ள, சொர்க்கவாசல் என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரபாண்டிய கட்டபொம்மனை பின்பற்றக் கூடியவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதிகள், தமிழகம் முழுவதும் வெளியாகும் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எவ்வாறு தடை விதிக்க முடியும்? அது மட்டுமல்லாமல் இப்போது இது ஒரு பேஷனாக மாறியுள்ளது. ஒரு படத்தை எடுப்பது அதை தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு திரைப்படம் மிகவும் சிரமப்பட்டு, அதிகம் செலவிட்டு எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்வதும் ஏற்புடையது அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு மனுதாரருக்கு தெரியுமா? தெரிந்தால்தான் அதில் எது தவறு? எது சரி? என்ற முடிவுக்கு வர முடியும். அவ்வாறு தெரியாத பட்சத்தில் எவ்வாறு திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியும்?

ஒரு திரைப்படத்தில் சில கருத்துக்கள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானவர் அதை பார்க்கக் கூடிய சூழலும் ஏற்படுகிறது. திரைபடத்தை பொழுதுபோக்காக விட்டுவிட்டால் அது யாருக்கும் தெரியாமலே போய்விடும்.

இது மட்டுமல்லாமல் இந்த நீதிமன்றத்திற்கு நாடு முழுவதும் தடை விதிப்பதற்கு எப்படி அதிகாரம் உள்ளது? எனவே சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x