Published : 27 Dec 2024 06:15 AM
Last Updated : 27 Dec 2024 06:15 AM
சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் வரை 11,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், முதல் தவணைக்கு பின், அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்தாததால், 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்படவில்லை.
நடப்பாண்டு முடியவுள்ள நிலையில், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை பொது சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. இதில், பாக்டீரியா மூலமாக பரவும் நிமோனியா மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி போடும் முகாம் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “குழந்தை பிறந்து 4, 10, 14-வது வாரங்களில், பெண்டாவேலன்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசியை செலுத்த தவறியவர்களுக்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 31-ம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
இதில், பெண்டாவேலன்ட் தடுப்பூசி மட்டுமின்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும், குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கான பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT