Published : 27 Dec 2024 01:35 AM
Last Updated : 27 Dec 2024 01:35 AM

முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி: காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது. மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது. கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் காவல்துறை இவ்வாறு செய்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டல் முறைகளும், விசாகா குழுவின் சிபாரிசுகளும் உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்? காவல் துறையினரின் இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியதாகும். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்களை சார்ந்தவர்களும் சொல்லொணா துயரத்தை வலியை சுமந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களோடு சட்டரீதியாக, மனிதநேயத்தோடு நின்று நீதிக்காக செயலாற்ற வேண்டிய காவல்துறை போன்ற அரசு நிர்வாக அமைப்புகள் அதற்கு எதிர்திசையில் செயல்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, வழக்கின் எப்.ஐ.ஆரை வெளியிட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட இதற்குக் காரணமான அனைவரும் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விவரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி: இதற்கிடையே, திமுக எம்.பி. கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில், `மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்​கப்​பட்​டுள்ள நிகழ்வு நெஞ்​சைப் பதற வைக்​கிறது. இதே நபர் நீண்ட காலமாக பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்​றவாளி என்பதும் அதிர்ச்​சியை அளிக்​கிறது. இந்த குற்​றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்​டும்' என தெரி​வித்​துள்ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x