Published : 27 Dec 2024 01:31 AM
Last Updated : 27 Dec 2024 01:31 AM
‘திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன்’ என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கசிய விட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும். அண்ணாமலை மீண்டும் திரும்பியுள்ளதால் 3 மாதங்களுக்குப் பின் அமைதிப்பூங்காவாக விளங்கிய தமிழ்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது என திமுக அமைச்சர் கூறியுள்ளார்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதால் மரியாதை கொடுத்து பேசுகிறேன். தனி மனிதனாக வீதிக்கு வந்து பேசினால் வேறுமாதிரி இருக்கும். நான் பேசுவது பிரதமரின் பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாகரீகமாகப் பேசி வருகிறேன்.
திமுகவில் பொறுப்பில் இருந்ததால்தான் காவல் நிலையத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை சோதனை செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கையைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது. எத்தனை நாட்களுக்கு வடக்கு, தெற்கு என பேசிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கழிவறை வசதி இல்லாத திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
வேறு மாதிரி அரசியல்: இனி ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதில்லை. வேறு வகையான போராட்டம் நடத்த உள்ளோம். பாஜக தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன் நின்று போராட்டம் நடத்துவார்கள். நாளை (இன்று) காலை 10 மணிக்கு எனது வீட்டின் முன் எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன்.
அதேபோல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நாளை முதல் நான் காலணி அணியப் போவதில்லை. 48 நாட்கள் விரதம் இருந்து பிப்ரவரி மாதம் முருகப் பெருமானின் ஆறுபடை வீட்டுக்கும் நேரில் சென்று முறையிடப் போகிறேன்.எனது அரசியல் நாளை முதல் வேறு மாதிரி இருக்கும். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் எதற்காக நான் மரியாதை கொடுக்க வேண்டும். பாஜக தொண்டர்கள் அவரவர் வீட்டின் முன் வந்து நிற்க வேண்டும்.
நடுத்தர வர்க்க மக்கள் பொங்கி எழ வேண்டும். சாலையில் வந்து நிற்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். நம் வீட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அமைதி காத்து நிற்போமா. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்று தெரிந்தும் அவரை வெளியே விட்டதுதான் இச்சம்பவத்துக்கு காரணம். கை, காலில் மாவுக்கட்டு போட்டால் மக்கள் கொண்டுள்ள கோபம் குறைந்துவிடுமா? 15 நாட்களில் தண்டனை வாங்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT