Published : 27 Dec 2024 01:22 AM
Last Updated : 27 Dec 2024 01:22 AM
‘தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருப்பதுபோல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது 15 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு உதராணமாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம் உள்ளது.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவிப்பார். தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தற்போதே எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அருமையாக பேசி வருகிறார். பதில் சொல்ல வேண்டியது தமிழக முதல்வர்தான். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT