Published : 27 Dec 2024 01:10 AM
Last Updated : 27 Dec 2024 01:10 AM

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் திமுக நாடகமாடுகிறது: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

மேலூர் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிராக போராடும் அ.வல்​லாளபட்​டி​ கிராமத்தினரிடம் ஆதரவு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தில் திமுக அரசு இரட்டை நாடகம் போடுகிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடப்பட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரிட்டாபட்டிக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி, அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: வேதாந்தா நிறுவனத்துக்கு அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்துக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் தேவை இல்லை என்பது பாமகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தும் இதுவே

ஆகும். தமிழகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் பாமக முதலில் நிற்கும். இது சோறு போடும் மண். இதை அழிக்கவிட மாட்டோம். ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு, அதே நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஆதரவு என திமுக அரசு இரட்டை நாடகம் போடுகிறது. பிப்ரவரி முதல் நவம்பர் வரை 10 மாதங்கள் திமுக அரசு அமைதியாக இருந்ததற்கு பேரம் பேசியதுதான் காரணம். இதில் பெரிய சூழ்ச்சி செய்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆட்சியில் இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கத்தை வரவிட மாட்டேன் என தமிழக முதல்வர் கூறினால் மட்டும் போதாது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் அறிவித்து சட்டமாக்கப்பட்டதுபோல் அரிட்டாபட்டி பகுதியை பாரம்பரிய பல்லுயிர் மண்டலம் என சட்டமாக்க வேண்டும். இச்சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

எங்களிடம் ஆட்சி இருந்தால் தமிழகத்தில் ஒரு சுரங்கம் கூட அமைக்கக் கூடாது என சட்டம் கொண்டு வருவோம். அரிட்டாபட்டியில் 117 ஹெக்டேர் பல்லுயிர் தளம் என்பதை மறுஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். பின்னர் அ.வல்லாளபட்டியில் வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு திரண்டிருந்த மக்களை சந்தித்து அன்புமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x