Published : 26 Dec 2024 06:37 PM
Last Updated : 26 Dec 2024 06:37 PM

அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதானவர் திமுகவை சேர்ந்தவரா? - அரசியல் கட்சிகள் கேள்வி  

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

சென்னை: “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்தவரா?” என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் துணை முதல்வருடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி எப்படி பல்கலை. வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டான்? அவரை முன்பே காவல் துறை கைது செய்யாதது ஏன்? ஆளுகட்சியான திமுகவை சேர்ந்தவர் என்பதாலா?

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று அரசு கூறுவதும் நம்பும்படியாக இல்லை. போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அனைத்து குற்றச்செயல்களுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருப்பது, திமுக தான் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பாலியல் குற்றவாளிக்கு அரசாங்கமே உறுதுணையாக இருக்குமானால் அவர்களிடம் சட்டம் ஒழுங்கை காக்ககோருவதில் எந்த பயனும் இல்லை.”

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: “சமூக விரோதிகளின் புகலிடம் தமிழகம் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்தே இல்லை என்பதை நிரூபிக்கிறது அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம். மிகவும் பிரசித்திப் பெற்ற பல்கலை. வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீரழிவை படம் பிடித்து காட்டுகிறது. சென்னையிலே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் பதிலளிக்கவில்லை. இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடுகிறார். மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையின் கைதுசெய்யவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருக்கிறது. இத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவை சேர்ந்தவரா என்பதை அரசு விளக்கமளிக்க வேண்டும்.”

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா? திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கண்காணிக்க தவறியதே இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் அனைத்தும் திமுகவினரின் தலையீடு இல்லாமல் நடக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முழு பொறுப்பு.

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்.”

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: “பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது. பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாஜக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு துணையாக நிற்கும்.”

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? என்று தெரியவில்லை. அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் காவல் துறை முதல் தகவல் அறிக்கையை வெளியில் கசியவிட்டதா என்ற ஐயம் எழுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற வழிகாட்டல் முறைகளும், விசாகா குழுவின் சிபாரிசுகளும் உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?. காவல்துறையினரின் இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x