Published : 26 Dec 2024 01:26 PM
Last Updated : 26 Dec 2024 01:26 PM

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம்: போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கேட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை முதலே அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி நடைபெறுவதால், போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவினரை போலீஸார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், பாஜகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்தனர்.

மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட வந்த அக்கட்சியின் கரு.நாகராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட பாஜகவினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், தமிழக அரசு மற்றும் காவல்துறையக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

எல்.முருகன் கண்டனம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும் போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை காவல் துறை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் போன்றோருக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற தகவலும், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக நாளொறுமுறை பொய்யுரைத்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், குற்றவாளி திமுக-வை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கையில் தாமதப்படுத்துவது எப்படி தீர்வாகும். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க குற்றமாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல் துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின், தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது.

ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் இதுவரை கைது செய்திருக்கும் காவல் துறை இது சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீர விசாரிக்க வேண்டும். கொடூர சம்பவம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் கடமை. இப்படி ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், குற்றம் செய்தவரை கைது செய்துவிட்டோம் என்று பிதற்றிக் கொண்டிருக்காமல், குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிகளை, தமிழக அரசும், தமிழக அரசின் கைப்பாவையாக உள்ள காவல் துறையும் மேற்கொள்ள வேண்டும்.

பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாஜக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு துணையாக நிற்கும்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x