Published : 26 Dec 2024 02:02 PM
Last Updated : 26 Dec 2024 02:02 PM

சாத்தனூர் அணை பண்ணையில் இருந்து 150 முதலைகள் வெளியேறியதா? - நீர்வளத் துறை திடீர் விளக்கம்

சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையில் உலா வரும் முதலைகள்.

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் உள்ள பண்ணையில் இருந்து 150 முதலைகள் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், ஒரு முதலை கூட வெளியேறவில்லை என நீர்வள துறை உதவி பொறியாளர் என்.சந்தோஷ் (சாத்தனூர் அணை பிரிவு) தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் முதலை பண்ணை உள்ளது. சுமார் 300 முதலைகள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஃபெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிச.2-ம் அதிகாலை 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்போது, அணையில் உள்ள முதலை பண்ணையில் இருந்து 150 முதலைகள் வெளியேறியதாக தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து சாத்தனூர் அணை முதலை பண்ணை ஊழியர்களிடம் காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறும்போது, “சாத்தனூர் அணையில் உள்ள பண்ணையில் இருந்து முதலைகள் வெளியேறவில்லை.

வெள்ளத்தில் அடித்து சென்றிருந்தால் தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், முதலைகள் இரை தேடி வெளியே வந்திருக்கும். கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் முதலைகள் வந்திருக்கலாம்” என்றனர்.

இந்நிலையில், நீர்வள துறை உதவி பொறியாளர் (சாத்தனூர் அணை பிரிவு) என்.சந்தோஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சாத்தனூர் அணை முதலை பண்ணையில் இருந்து முதலைகள் வெளியேறவில்லை. உபரி நீர் வெளியேற்றத்தின்போது இயற்கையாக வளரும் முதலைகள் வெளியேறி இருக்கலாம். வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலை பண்ணையில் உள்ள முதலைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளது என வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். 150 முதலைகள் வெளியேறவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடரும் சந்தேகமும், அச்சமும்: அதேநேரத்தில், சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையில் பராமரிக்கப்படும் முதலைகளின் எண்ணிக்கை விவரத்தை நீர்வள துறை தெரிவிக்கவில்லை. முதலை பண்ணையில் உள்ள முதலைகளுக்கு உணவு பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் கூறப்படும் நிலையில், முதலை பண்ணையில் வளர்க்கப்படும் முதலைகளின் எண்ணிக்கை மற்றும் தண்ணீர் திறப்புக்கு பிறகு இருப்பு உள்ள முதலைகளின் எண்ணிக்கையில் வனத்துறையிடம் இருந்து வெளிப்பட தன்மையான அறிவிப்பு இல்லாததால் மக்களுக்கான சந்தேகமும், அச்சமும் தொடர்ந்து நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x