Last Updated : 26 Dec, 2024 12:02 PM

2  

Published : 26 Dec 2024 12:02 PM
Last Updated : 26 Dec 2024 12:02 PM

திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம்: திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதிக்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். குற்றவாளி யார் என்றுகூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது.

இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டும் இன்னமும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றம் கேட்டும் காவல்துறை பதில் சொல்லவில்லை.

இதில் குற்றவாளி யார் என ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி நிகழ்த்தப்படுகிறது. இதற்கு அம்மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒதுக்கவேண்டும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டி நேற்று முன் தினம் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் கொடுத்த இட ஒதுக்கீட்டை மீண்டும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வருகின்ற 6ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.

பாமகவின் கொள்கை வழிகாட்டி அம்பேத்கர்தான். இந்தியாவிலேயே அவரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கட்சி பாமக. அம்பேத்காரின் பெருமைகளை காப்பதாக சொல்லும் திமுக, அவருக்காக என்ன செய்துள்ளது? 1990 ல் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டபல்கலை கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை இல்லை. திமுக அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை.

அண்ணா பல்கலை கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வெட்கி தலை குனியவேண்டும். கைது செய்யப்பட்ட ஞானசேகரன்மீது 15 குற்றவழக்குகள் உள்ளதாக காவல்துறை சொல்கிறது. கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. இதற்கு கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். பொறுப்புள்ள அமைச்சர் இப்படி சொல்லலாமா?

தமிழக அரசின் மூலதன செலவுகள் கடந்த ஆட்சியைவிட 8.40 சதவீதம் குறைந்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் கூறியுள்ளது. மூலதன செலவுகளை செய்வதில் செய்யும் தாமதம் தமிழக வளர்ச்சியை குறைக்கும். கடன் வாங்குவதில் இலக்கை தாண்டும் திமுக அரசு மூலதன செலவுகளை செய்வதில் சுணக்கம் காட்டுவது காண்டிக்கதக்கது. மதுரை மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x