Published : 26 Dec 2024 11:42 AM
Last Updated : 26 Dec 2024 11:42 AM
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் பல்கலைக்கழகம் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கிண்டி வழியாக அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக, இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நடந்தது என்ன? சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது.கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார். மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT