Published : 26 Dec 2024 11:35 AM
Last Updated : 26 Dec 2024 11:35 AM
சென்னை: “திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல 2026 தேர்தலில் 200+ இடங்களில் வெற்றி பெறப்போகும் நிரந்தரக் கூட்டணி” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொரு ஆண்டும் அய்யா நல்லகண்ணு பிறந்தநாளில் இதே இடத்தில் நாம் கூடி வாழ்த்துவது உண்டு. அந்த அடிப்படையில், இன்றைக்கு கூடியிருக்கின்றோம் என்று சொன்னால், இது அவர் காணக்கூடிய நூற்றாண்டு பிறந்தநாள் விழா.
முத்தரசன் சொன்னதுபோல், பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. நம்மைப் பொறுத்தவரையில் இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை.
அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பையும், சிறப்பான வாய்ப்பையும், அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய நல்லகண்ணு அவர்களை நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளபடியே சொல்ல வேண்டும் என்றால், நான் வாழ்த்த வரவில்லை. வாழ்த்தை பெற வந்திருக்கிறேன். இது தான் உண்மை.
எல்லோருக்கும் எல்லாம் – சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என்ற உணர்வோடு, இன்றைக்கு தமிழகத்தில் உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம், உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய அய்யா நல்லகண்ணு
அமைதியாக, அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து வெளிப்படுத்தக்கூடியவர். அப்படிப்பட்டவரை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து நீங்கள் இருந்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பினுடைய தலைவர்கள் சார்பில் நான் அன்போடு அவரை கேட்டுக் கொண்டு நமது முத்தரசன் பேசுகின்ற போது சொன்னார்; நான் செயற்குழுவில் பேசிய அந்தப் பேச்சை கோடிட்டுக் காட்டி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னதாக எடுத்துச் சொன்னார். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்ன என்று கேட்டால், 200 அல்ல, 200-யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் நம்முடைய கூட்டணி அமைந்திருக்கிறது.
7 ஆண்டு காலமாக இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. தேர்தல் களத்தில் நின்று தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறோம். ஆகவே, இந்த கூட்டணியைப் பொறுத்தவரைக்கும், கொள்கை கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டு, உங்கள் அனைவரின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அய்யா நல்லக்கண்ணு வாழ்ந்து நமக்கு வழிகாட்டிட வேண்டும் என்று கேட்டு, வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT