Published : 26 Dec 2024 10:18 AM
Last Updated : 26 Dec 2024 10:18 AM
சென்னை: “சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லககண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது.
இதனை ஒட்டி பாஜக மாநில தலைவர், “இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணுவுக்கு, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லகண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக.. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், ஸ்ரீவைகுந்தம் என்ற ஊரில், பெரும் விவசாயக் குடும்பத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் நல்லகண்ணு. இவரோடு பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் சேர்ந்து பத்து பிள்ளைகள் கொண்ட பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றவர். இவரது பள்ளி ஆசிரியரான பலவேசம் மூலம் விவேகானந்தர், பாரதி, திரு.வி.க. போன்ற ஆளுமைகளையும், அவர்தம் படைப்புகளின் அறிமுகத்தைப் பெற்றார். அத்துடன் கம்யூனிச சிந்தாந்தத்தையும் பயின்றார். இதன் விளைவாக 1943 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கினார். அதில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இன்றுவரை இயங்கி வரும் பெருமைக்கு உரியவர்.
இரா.நல்லகண்ணு பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமும் ஒரே நாளில் (26.12.1925) அமைந்திருப்பதால் இதனை அக்கட்சி பெரும் விழாவாக முன்னெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT