Last Updated : 26 Dec, 2024 10:32 AM

 

Published : 26 Dec 2024 10:32 AM
Last Updated : 26 Dec 2024 10:32 AM

புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்தும் காஞ்சியில் பயன்பாட்டுக்கு வராத புதிய மார்க்கெட்

​காஞ்சிபுரம் ரயில்வே சாலை​யில் ஆங்கிலேயர் காலத்​தில் 1.50 ஏக்கர் பரப்​பள​வில் கட்டப்​பட்ட, ராஜாஜி காய்கறி மார்க்​கெட் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட கடைகளுடன் இயங்கி வந்தது. சென்னை, கோயம்​பேடு மற்றும் வெளி மாநிலங்​களில் இருந்து வரும் காய்​கறிகளை இங்குள்ள வியாபாரி​களிடம் இருந்து, காஞ்​சிபுரம் மற்றும் அதனை சுற்றி​யுள்ள 80-க்​கும் மேற்​பட்ட கிராமப்பு​றங்களை சேர்ந்த ஆயிரக்​கணக்கான பொது​மக்​கள், வியாபாரிகள் நாள்​தோறும் வாங்​கிச் செல்​கின்​றனர்.

மார்க்​கெட்​டில் பெரும்​பாலான கடைகளின் மேற்​கூரைகள் சேத மடைந்​த​தால், மழைநீர் புகுந்து சுமார் 2 முதல் 3 அடி வரையிலும் தேங்கி நின்​றது. மேலும், காய்கறி மூட்​டைகளை உள்ளே கொண்டு வந்து குடோன்​களில் பத்திரப்​படுத்த முடியாத நிலை இருந்​தது. இதனால், மார்க்​கெட்டுக்கு புதிய கட்டிடம் அமைக்கவேண்​டும் என வியாபாரிகள் மற்றும் பொது​மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலை​யில், காஞ்​சிபுரம் மாநக​ராட்சி சார்​பில் புதிய மார்க்​கெட் கட்டிடம் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது. இதையடுத்து, 100 ஆண்டுகளை கடந்த ராஜாஜி மார்க்​கெட்​டின் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றி, பல்வேறு அடிப்படை வசதி​களுடன் புதிய கட்டிடம் அமைப்​ப​தற்காக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமான பணிகள் தொடங்​கப்​பட்டன. இதையடுத்து, ஓரிக்கை பகுதி​யில் தற்காலிகமாக மார்க்​கெட் செயல்​பட்டு வருகிறது.

மேலும், புதிய கட்டிடத்​தில் ஆண், பெண் கழிப்​பறை​கள், ஓய்வு அறை, உணவகம், ஏடிஎம், காவல் கண்​காணிப்பு அலுவலகம், மழைநீர் சேகரிப்பு போன்ற பல்வேறு அடிப்படை வசதி​களுடன் கட்டிடம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், தற்போது புதிய மார்க்​கெட்​டில் 250 கடைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. இந்த புதிய கட்டிடத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் காணொளி மூலம் பயன்​பாட்டுக்கு திறந்​து​வைத்​தார். இதனால், மார்க்​கெட் விரை​வில் இயங்​கும் என பொது​மக்கள் கருதினர்.

ஆனால், சுற்றுச்​சுவர் உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்​டி​யுள்ள​தா​லும், வியாபாரிகள் தரப்​பில் மாநக​ராட்​சிக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற பல்வேறு நிர்வாக காரணங்​களாலும் முதல்வர் திறந்​து​வைத்து 4 மாதங்கள் கடந்த பின்னரும் மார்க்​கெட் பயன்பாட்டுக்கு வரமுடியாத நிலை உள்ளது.

இந்நிலை​யில், புதிய மார்க்​கெட் கட்டிடத்​தில் கடை அமைக்க உள்ள வியாபாரிகள் ஒரு ஆண்டுக்கு, ஒருகடைக்கு ரூ.55 ஆயிரம் வாடகை​யாக​வும் மற்றும் கடையில் இரும்பு கூண்டு அமைக்க ரூ.45 ஆயிரம் மற்றும் மின்சார வாரியம் சார்​பில் அமைக்​கப்​படும் மீட்​டருக்கு டெபாசிட்டாக ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.1.7 லட்சம் செலுத்த வேண்​டும் என மாநக​ராட்சி தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​ட​தாக​வும், இதன்​பேரில், வியாபாரிகள் மேற்​கண்ட கட்ட​ணத்தை செலுத்​தி​யுள்ள​தாக​வும் கூறப்​படு​கிறது.

எனினும், பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்து​வதற்கான பணிகள் நடைபெற்று வருவ​தால், மார்க்​கெட் எப்போது திறக்​கப்​படும் என தெரியாதநிலை உள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் மற்றும் பொது​மக்கள் கூறிய​தாவது: காஞ்​சிபுரம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொது​மக்கள் பண்டிகை நாட்கள் மற்றும் அன்றாட தேவை​களுக்கான மளிகை மற்றும் காய்​கறிகளை வாங்​கு​வதற்கான பிரதான இடமாக ராஜாஜி மார்க்​கெட் இருந்து வந்தது. இந்நிலை​யில், புதிய கட்டிடம் அமைக்​கும் பணிகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு மார்க்​கெட் மூடப்​பட்​டது.

இந்நிலை​யில், பணிகள் நிறைவடைந்து கடந்த ஆகஸ்​டில் முதல்வர் மார்க்​கெட்டை திறந்து வைத்​த​தால் அனைவரும் மகிழ்ச்​சி​யடைந்​தோம். ஆனால், முதல்வர் திறந்து 4 மாதங்கள் கடந்​தும் மார்க்​கெட் செயல்​படாமல் உள்ளது. இதனால், ரயில்வே சாலை உட்பட பல்வேறு முக்கிய வீதி​களில் சாலைகளை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

இதனால், போக்கு​வரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். ​காய்​கறிகளின் ​விலை ஒரே ​மா​திரியாக இல்லை. தங்​களுக்கு ஏற்​றவாறு ​வியாபாரி​கள் ​விலையை அதிகரித்து ​விற்பனை செய்​கின்​றனர். அத​னால், அதிகாரி​கள் இம்மாத இறு​திக்​குள் ​மார்க்​கெட் கடைகள் செயல்​படும் வகை​யில் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x