Published : 26 Dec 2024 10:30 AM
Last Updated : 26 Dec 2024 10:30 AM
சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால், ஒரு மாதத்துக்குள் வரைபட அனுமதி கிடைக்கிறது. இதேபோல பொன்னேரி, திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால், ஒரு மாதத்துக்குள் அனுமதி கிடைத்து விடுகிறது.
இதேபோன்று, சென்னை புறநகரில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு, வரைபட அனுமதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்தது. இதனால் நேரிடையாக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய முயன்றால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சாப்ட்வேர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இணைக்கப்பட வில்லை. இதனால் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பூந்தமல்லி, குன்றத்தூர், புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர், வில்லிவாக்கம், புழல், சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் தினம்தினம் பொதுமக்கள் வருகை தந்து எப்போது ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியும் என கேட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி பொதுமக்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தரைத் தளம், முதல் தளம் வீடு கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்து கட்டிட வரைபட அனுமதி பெற்று கொள்ளலாம் என அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி மாநகராட்சி, நகராட்சி பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் ஊராட்சி பகுதி மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வீடு கட்டுவதற்கான அனுமதி கிடைக்காமல், பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால், கட்டிடம் கட்ட முடியாமல் தவிப்பவர்களிடம் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பணம் வசூலித்து, காரியத்தை முடித்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் உடனடியாக, கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT