Published : 26 Dec 2024 06:18 AM
Last Updated : 26 Dec 2024 06:18 AM
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா சென்னை அடையாறில் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, நடிகர் சரத்குமார், மாநில துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், வாஜ்பாயின் படத்தை ஹெச்.வி.ஹண்டே திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, 1 லட்சம் பெண் குழந்தைகளை ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, முதல் கட்டமாக 10 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் ஆயிரம் வைப்பு நிதி வைக்கப்பட்டு திட்டத்தில் இணைத்தார்.
அப்போது, அண்ணாமலை பேசுகையில், பாஜக சார்பில் ஓராண்டுக்குள் 1 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணையாக ரூ.1,000 வைப்பு நிதி செலுத்தி, பிரதமரின் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்க இருக்கிறோம். பூத்துக்கு 5 குழந்தைகளுக்கு முதல் தவணை ரூ.1,000 செலுத்தி சேர்க்கும்போது, 3 லட்சம் குழந்தைகளை தாண்டிவிடும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டங்ஸ்டன் விவகாரத்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய அரசு டங்ஸ்டன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும். தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் வருவார்.
அவர் வருகையை எதிர்த்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று சொன்னால், நிச்சயம் அவர் வருவார். அம்பேத்கருக்கு, காங்கிரஸ் கட்சி செய்த கொடூரம் தினமும் புதுபுது தகவல்களாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. இன்னும் புதிய தகவல்கள் பல வெளியே வரும்.
வன்னியர்களுக்கு 15 இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அன்புமணி கூறியதில் எந்த தவறும் இல்லை. அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குங்கள் என்று தான் பாஜகவும் சொல்கிறது. ஜாபர் சாதிக் விவகாரத்தில் தமிழக அரசு மீது சந்தேகம் வலுவடைந்து கொண்டே இருக்கிறது. வழக்கில் இருந்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி விளக்கம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT