Published : 25 Dec 2024 11:57 PM
Last Updated : 25 Dec 2024 11:57 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை புழல் சிறையில் வைத்து, ஶ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கடந்த ஜூன் மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலைமை செயலகத்தில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்து ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டார்.
அந்த வீடியோவை வைத்து யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் வீடியோ வெளியிட்டனர். மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி சக்திவேல்ராஜன் ஜீயர் சார்பில் அளித்த புகாரில் ரங்கராஜன் நரசிம்மன், ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் சென்னை புழல் சிறையில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர். அவர் நாளை (டிசம்பர் 26) சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT