Published : 25 Dec 2024 07:35 PM
Last Updated : 25 Dec 2024 07:35 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பால் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் அரசு சார்பில் 75% மானியத்தில் 450 கறவைப் பசுக்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
மத்திய அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் 10 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்கம், பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கத் தொடக்க நிழ்ச்சி காணொலியில் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று இன்று தொடங்கிவைத்தார். அதன்படி புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் புதிதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
அச்சங்கத்தை தொடங்கிவைத்து புதுவை முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ''புதுச்சேரியில் விவசாய நிலம் குறைந்ததால், பசுக்கள் வளர்ப்பும் குறைந்துவிட்டது. அதனால் மாநிலத்துக்கு தினமும் 1 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், தற்போது 40 ஆயிரம் லிட்டரே கிடைக்கிறது. அதனால் பற்றாக்குறையைப் போக்க வெளி மாநிலங்களில் இருந்து பால் வாங்கும் நிலையுள்ளது.
பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் வீடுகளில் கறவை மாடுகளை வளர்க்க அரசு உதவிவருகிறது. அதன்படி 75% மானியத்தில் 450 கறவை பசுக்களை அரசு மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான தீவன மானியமும் வழங்கப்படும்.
விவசாயிகள் மட்டுமின்றி படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களும் பசுக்களை வளர்த்து பால் உற்பத்தி மூலம் வருவாயை ஈட்டலாம். அதற்கு அரசு தேவையான உதவிகளை செய்துதரும். நகர்ப்பகுதிகளில் சிறிய இடத்தில் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பசுக்களை வளர்த்து பால் உற்பத்தி செய்யலாம். பசு வளர்ப்பில் சிரமம் இருந்தாலும் பால் மற்றும் அதைச் சார்ந்த உணவுப் பொருள் உற்பத்தியால் லாபம் பெறலாம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT